பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவனான அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடைபிடித்தனர். அப்போது இந்தியாவை எதிர்த்தும் பாகிஸ்தானை ஆதரித்தும் கோஷமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவர் சங்க தலைவர் உள்பட 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்கள் ஆஜர்படுத்தப்படும் நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் பற்றி பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தனது இணையதளத்தில், “ராகுல் காந்தி பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறாரா? அவர் இந்தியாவில் இன்னும் ஒரு பிரிவினையை விரும்புகிறாரா?. ராகுல் காந்தி மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்களின் பேச்சுகளை பார்க்கும்போது அவர்கள் மனதில் தேச நலன் சார்ந்த சிந்தனை இல்லை என்பது தெரிகிறது.” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அமித் ஷாவின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, “காந்திய சிந்தனை முறையை கொன்றவர்கள், காந்தியை கொன்ற நாது ராம் கோட்சேவின் வாரிசுகளின் சிந்தனை முறையை பின்பற்றுபவர்கள் நாட்டுக்கும், காங்கிரசுக்கும் தேசப்பற்று குறித்து பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதே சமயம் மோடிக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் அனைவரும் தேச விரோதிகள் என்பது உண்மைக்கு புறம்பானது” என்று தெரிவித்துள்ளார்.