SLMC அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட 28வது வருட நிறைவின் நீங்கா நினைவுகள் !

sma gaoor slmc ashraff

 

முஸ்லிம் காங்கிரஸ் முதல்முதலாக 1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி காத்தான்குடியில் உள்ள பிரதான வீதியில் அமைந்திருந்த ஒரு பாடசாலை மண்டபத்தில் அவ்வூர் முன்னாள் பட்டினசபைத் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மறைந்த ஏ. அகமட் லெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்ற அங்குராப்பண கூட்டத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது. அதற்கான ஆரம்ப அமைப்புக்குழுவின் மூலம் அழைப்பிதழ்களையும் அச்சிட்டு அனுப்பிவைத்தவன் என்பதனால், என்னால்தான் உரிமையுடன் உண்மைகளை ஊருக்கு உணர்த்தலாம் என எண்ணுகிறேன்.

 
அன்று முதல் கிழக்கிலங்கையில் உள்ள அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற எல்லா மாவட்டங்களிலும்; அதன் ஆரம்ப கால அரசியல் நடவடிக்கைகளை செயல்படுத்தி வந்த வேளைகளில் விஷேடமாக கிழக்கிலங்கைக்கு அப்பால் சென்று இக்கட்சியை அறிமுகபடுத்தி தேசிய கட்சியின் அரசியல் நீரோட்டத்தில் தனது பங்களிக்பையும் வழங்குவதற்காக முழு இலங்கையையும் பிரதிநிதிதுப்படுத்துவதற்காகவும் முதலில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காகவும் அத்துடன் ஏனைய மக்களையும் இணைத்துக்கொள்வதற்காகவும் வேண்டி இக் கட்சியை பல ஊர்களுக்கும் நாம் எடுத்துச் சென்று அவ்வப்போது அறிமுகப்படுத்தியும் சிறிய கூட்டங்களும் கருத்தரங்குகளும், கலந்துரையாடல்களும் நாடாத்திவந்தோம்.
முஸ்லிம் காங்ரஸின் ஆரம்பமும் அடிப்படைத் தோற்றமும் ஒரு அரசியல் கட்சியாக பதியப்பட வேண்டுமென மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நீண்ட கால கனவை நனவாக்கவேண்டித்தான் இக்கட்சி தோற்றம் பெற்றது என்ற உண்மையை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஒரு சிலர் தமது அரசியல் நலனுக்காக கூறுவது போன்று இக்கட்சியின் வரலாற்றில் ஒருபோதும் சமூக சேவை சங்கமாக இருந்த சரித்திரமில்லை.

 
பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தான் அனுபவரீதியில் கண்ட கசப்பான அனுபவங்களை உணர்ந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் அரசியல் கட்சி பற்றி அப்போதைய உள்ளுர் அரசியல் வாதிகளுடன் உரையாடினார். ஆனால் அதனை அவர்கள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதற்கு ஆதரவு அளிக்கவும் இல்லை. இருப்பினும் தான் எடுத்த முடிவை முதலில் அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள கனிசமான புத்திஜீவிகளை அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்வதற்காக வேண்டி கூட்டப்பட்ட மேற்படி ஆரம்ப கூட்டம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பல்வேறு கருத்துமுரண்பாடுகளும்; காரசாரமான வாக்குவாதங்களும் இடம்பெற்ற இவ்வாறான அரசியல் கட்சியின் தோற்றத்திற்கான அவசியம் பற்றி இறுதியில் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

gafoor lawyer
பல அரசியல் அமைப்புக்களில் அங்கம் வகித்து அதன் வெற்றிக்கு தன்னை அர்ப்பனித்து செயல்பட்ட அஸ்ரப் அவர்களின் அரசியல் அனுபவம் முஸ்லிம் காங்கிரஸூக்கு உரமாக அமைந்திருந்தது. முஸ்லிங்களுக்கு தனியான அரசியல் கட்சியின் தேவை கடந்த அரை நூற்றாண்டு காலமாக பல தரப்பட்ட அரசியல்வாதிகளால் பேசப்பட்ட போதும் அதனை துணிந்து செயற்பட வைப்பதில் துணிகரமாக சிந்தித்து செயல்பட்டு உயிருட்டியவர்தான் மறைந்த மாமனிதர் அஸ்ரப் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒரு தனிமனிதனின் தலைமைத்துவத்தின் கீழ் எவ்வித அரசியல் அதிகாரமும் இன்றி அப்போதைய அடாவடித்தனம் அத்தனைக்கும் முகங்கொடுத்த முஸ்லிம்களின் மூத்த முதல் தலைவர் இவர்தான் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது முதன்முதலில் எதிர்த்தவர்கள் அன்றைய முஸ்லிம் அரசியல் தலைவர்களே அன்றி வேறு மதத்தவர்கள் அல்ல.

 
இருந்தும் முஸ்லிம் காங்கிரஸின் முதல் கூட்டத்தை கல்முனையில் கூட்ட ஒரு பொது மண்டபம் எங்களுக்கு வழங்க பலர் மறுத்தார்கள் மாறாக எதிர்ப்புகளும் ஏச்சுப் பேச்சுக்களும் எங்களுக்கெதிராக் எழுப்பப்பட்டது இறுதியில் கல்முனை பிரதான வீதியிலுள்ள மெதடிஸ்த மண்டபத்தில் தான் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அக்கூட்டத்தை நடத்தினோம். இப்படித்தான் காங்கிரஸின் வரலாறு கல்முனையில் பல கஸ்டமான ஆரம்பகாலகட்டங்களை கடந்தும் சந்தித்தும் சந்திக்கு வந்தது என்ற சங்கதியும், சம்பவமும் இன்றுள்ளவர்களுக்குத் தெரியுமா ?
இக்கட்சியின் நடவடிக்கைகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள முழுக் கிராமங்களுக்கும் நாம் எடுத்துச் சென்ற போது இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியா? என்று எல்லோரும் ஏளனமாக எங்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.

 

 

1983ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தின் பின் ஜே. ஆர். ஜயவர்த்தனா அவர்களின் தலைமையில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் கூட முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி சுயமாகப் பேச எங்களுக்கு என்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லாத காரணத்தினால், பேரினவாத கட்சிகளில் ஒட்டிக் கொண்டிருந்த முஸ்லிம் தலைவர்களின் தயவில்தான் இந்நாட்டு முஸ்லிம் மக்கள் அன்று தங்கியிருந்தார்கள்.
அதனால்தான் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி கொழும்பில் நடந்த மாபெரும் பொது கூட்டத்தில் வைத்து ஒரு அரசியல் கட்சியாக சட்டபூர்வமான சரத்துக்களை நிறைNவுற்றுவதற்காக வேண்டியும் இக்கட்சியை அன்று நாம் பகிரங்கமாக தலைநகரில் பிரகடனப்படுத்திய போது அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவராக மறைந்த மர்{ஹம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களும் அதன் ஸ்தாபகப் பொதுச் செயலாளராக மீண்டும் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் இ ஓட்டமாவடியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான மறைந்த அப்துல்காதர் அவர்கள் பொருளாளராகவும் ஏகமானதாக தெரிசெய்யப்பட்டோம்.

 

இவைகள் இன்றுள்ள புதியவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான் ஆனால் தெரிந்த ஒரு சிலரும் தெரியாதவர்களாகத்தான் இன்றும், இன்னும் இருந்துகொண்டு இருக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பதிவதற்காக சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் ஆணையாளரை மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான நானும் சட்ட வல்லுனரான பாயிஸ் முஸ்தபாவும் சென்றிருந்த போது அப்போதைய தேர்தல் ஆணையாளர் திரு. சந்திர ஆர். டி.சில்வா அவர்கள் எங்களைப் பார்த்து கூறினார்;. முதலில் முஸ்லிம் காங்கிரஸின் பெயரை மாற்ற வேண்டும் முக்கியமாக ‘முஸ்லிம்’ என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இன ரீதியில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் பதிவதில்லை என்றும் மறுத்துரைத்தார்.

 
ஆனால் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் அதற்கு இணங்கவுமில்லை தேர்தல் ஆணையாரின் ஆணைக்குப் பணியவுமில்லை. இந்நிகழ்வு 1986ம் ஆண்டு கொழும்பு – 7, றோயல் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள கேம்பிறிச் பிளேசில் அமைந்திருந்த தேர்தல் ஆணையாளரின் காரியாலயத்தில் நடைபெற்ற மிக நீண்ட விவாதத்தின் ஒரு பகுதிதான் இது.
இக்கட்சி 1980ம் ஆண்டு முதல்; அரசியல் ரீதியாக மட்டுமே எமது பிரதேசத்தில் செயற்பட்டு வந்தன என்பதற்கான ஆவணங்கள் அத்தனையையும் பத்திரிகைச் செய்திகள் கடிதத் தொடர்புகள் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கூட்டக் குறிப்புகள் எல்லாவற்றையும் கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் சமர்ப்பித்த போது தேர்தல் ஆணையாளரினால் தொடர்ந்து பேச முடியவில்லை.

 
மறைந்த மாமனிதரின் விவாதத் திறமையும் பாயிஸ் முஸ்தபாவின் சட்ட வியாக்கியானமும் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணக் குறிப்புகளும் கட்சி நடவடிக்கைக் கோவைகளும் ஆதார பூர்வமாக இருந்ததினால் அப்போதைய தேர்தல் ஆணையாளரினல் எங்களுக்கு எதிராக எதுவும் பேச முடியவில்லை. இறுதில் இக்கட்சிக்கு முஸ்லிம் என்ற அப்பெயருடன்தான் 1988ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைக்குரல்களை பறைசாட்டுவதற்காக பாதுகாப்பதற்காகவும் பதியப்பட்டது. என்ற ஒரு வரலாற்றுச் சரித்திரத்தை இவ்விடத்தில் இன்றும் குறிப்பிட்டுக் காட்டுவதில் பெருமைப்படுகின்றேன்.

 
இது போன்ற எண்ணற்ற பல தடைகளைத் தாண்டித்தான் நாம் கஷ்டப்பட்டு அவைகளை நாம் கடந்து வந்துள்ளோம். நாங்கள் பெற்ற அப்போதைய வலிகளின் வேதனைகளையும் தியாகங்களையும், சேவைகளையும், பங்களிப்புக்களையும் இப்போதைய இந்த ‘முஸ்லிம்’ அரசியல்வாதிகளும்இ ‘தேசியப்பட்டியலாளர்கள் படையிலுள்ள’ எத்தனை பேருக்கு இவைகள் விளங்கும்? நாம் நடந்துவந்த காங்கிரஸின் கரடுமுரடான பாதையின் நீளமும் அகலமும் அதன் ஆழமும் அவர்களுக்குப் புரியுமா?
அந்த ‘முஸ்லிம்’ என்ற சொல் அன்று நீக்கப்பட்டிருந்தால் இன்றுள்ள இவர்களில் பலர் நாடாளுமன்ற கதிரைகளைக் கண்டிருப்பார்களா என்று அண்மையில் வெளியான இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்று ஆய்வுப் புத்தகத்தில் அந்த ஆய்வின் அரசியல் ஆசிரியர் குறிப்பிட்டு எழுதியுள்ளதை இத்தருணத்தில் இங்கு தொட்டுக்காட்ட விருப்புகிறேன். அந்த பாராளுமன்ற பாக்கியம் இதுவரை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என் ஏக்கம் என்னுள் எப்பொழுதும் எரிந்துகொண்டுதான் இருக்கின்றது. இருப்பினும் (இன்ஷா அல்லாஹ்) …

 
இக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலம் முதல் இதன் பெயரைப் பார்த்த பலர் குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் கொதித்தெழுந்தார்கள். கட்சியை காரசாரமாக விமர்சித்தார்கள். இனத் துவேசத்தை கக்கினார்கள், கூட்டங்கள் கூடுவதற்கு தடை விதித்தார்கள், ஒலிபெருக்கிக்கான அனுமதி மறுக்கப்பட்டது, மேடைகள் உடைக்கப்பட்டன, ஆதரவாளர்கள் தாக்கப்பட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள். இப்படித்தான் இக்கட்சியின் அன்றைய வரலாறு இரத்தக் கறைகள் படிந்த படிகளை அதன் அத்திவாரக்கற்களாகப் பாவித்து எங்களால் அன்று கட்டப்பட்ட கம்பீரமான கட்டடம்தான் இன்றைய ‘முஸ்லிம் காங்கிரஸ்’. இதில் 1980ம் ஆண்டில் எங்களுடன் இருந்து இக்கட்சியை ஆரம்பித்த ஆரம்பப் போராளிகளென்று எவரும் இன்று இல்லை என்பதுதான் நிதர்சனமாhன உண்மைகள்.

 
முஸ்லிம்களின் உரிமைகள்; மதிக்கப்படவேண்டுமென்ற என்ற கோட்பாட்டை மறைந்த மாமனிதர் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல், தமிழ் மூத்த அரசியல் தலைவர்களை மதித்து அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் வளர்த்து அதனை பாதுகாத்தும் வந்தார்;. உதாரணமாக, 1983ம் ஆண்டு ஜுலை கலவரத்தின் பின்பு இந்தியா சென்ற தமிழ் தலைவர்களை அழைத்து அஷ்ரப் அவர்களின் கல்முனை அம்மன் கோவில் வீதியில் அமைந்த ‘ஹிறா’ இல்லத்தில் ஒரு விசேட கலந்துரையாடலை நாம் அன்று நடாத்தினோம்.

 
இவ்வைபவத்திற்கு தமிழ் மூத்த அரசியல் தலைவர்களான மறைந்த அ. அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், பட்டிருப்பு முன்னாள் எம்.பி. கணேசலிங்கம், அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர் கல்முனை வேல்முருகு, கந்தையா நொத்தரிசு போன்ற உள்ளுர் தமிழ் பெரும் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட ஏனையோரும் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை வாழ்த்தி வரவேற்று, ஆசீர்வாதித்தார்கள். இக்கட்சி எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்த உதவ வேண்டும் என்றும் வேண்டிச் சென்றார்கள். இவர்களில் எவரும் எம்மத்தியில் இன்றில்லை என்பதுதான் இன்றைய பிரச்சினை அவர்கள் அத்தனைபேரும் இம்மண்ணைவிட்டு மறைந்து விட்டார்கள். இவர்களை இவர்கள் நரடியாகக் கண்டிருப்பார்களா? அல்லது அவர்களுடன்தான் நேரில் கதைத்திருப்பார்களா?

 
மு.கா. வின் அடையாளச் சின்னமாக பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 25 நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இதுவரை தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார்கள். அத்துடன் 100க்கு மேற்பட்ட உள்ளுராட்சி பிரதிநிதிகளாக மாகாண சபை, மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என்று ஏராளமான மக்கள் பிரதிநிதிகளான உறுப்பினர்களை இக்கட்சி இன்றுவரை கொண்டிருக்கின்றது என்பதே அதன் பலமாகும். அத்துடன் ஆயிரக்கணக்கான அரசியல் ஊழியர்களை இதுவரை இக்கட்சி நியமித்துள்ளது இன்னும் எத்தனையோ அபிவிருத்தித் திட்டங்களையும் வகுத்துவந்துள்ளது. அவைகள் பற்றி பல பக்கங்கள் எழுதலாம் ஆனால் முடிக்க முடியாது.
கிழக்கில் உதிக்கும் உதய சூரியனின் ஒளிக்கீற்றுக்கள் உலகுக்கு ஒளி பரப்புவது போன்றுஇந்நாட்டின் நாலாபகுதிகளிலும் ‘காங்கிரஸ்’ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. கட்சிக்கு கிடைத்த மரச்சின்னத்தின் ஆணிவேர் (மரம்) கிழக்கில் இருந்த போதிலும் இதன் பக்கவேர்களும் ஏனைய கிளைகளும் கிழக்கிற்கு அப்பால் ஆலமரம் போல் பெரும் விருட்சமாக வேரூன்றி இன்று பல்வேறு மட்டங்களில் பல ரகத்தில் பலருக்கு நிம்மதியாக நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. (அல்ஹம்துலில்லாஹ்).

 
இந்நாட்டிலுள்ள சகல சிறிய அரசியல் கட்சிகளின் எதிர்கால செயற்பாட்டுக்கு உத்தரவாதத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் காரணகருத்தாவாகத் திகழ்ந்து வந்துள்ளது. உதாரணமாக, 12.5மூ வீதமாகவிருந்த வெட்டுப்புள்ளியை 5 வீதமாக மாற்ற மறைந்த ஆர். பிரேமதாசா ஜனாதிபதி அவர்கள் மூலம் ஓர் அரசியல் புரட்சியை ஏற்படுத்தியவர்தான் மாமனிதர் அஷ்ரப் மூலம் பல சிறிய கட்சிகள் இன்று பாராமன்றத்தில் பவணி வருகின்றார்கள்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்குப்பின் இப்போதைய கட்சியின் தலைவரும் அமைச்சருமான சகோதரர் மான்புமிகு றவூப் ஹக்கீம் அவர்கள் அவ்வப்போது இலங்கையில் தலைவிரித்தாடும் பல்வேறுபட்ட பேரினவாதிகளின் முழுச்சவால்களுக்கும் முகங்கொடுத்து அவர்களின் கெடுபிடிகளை உடைத்து இக்கட்சியின் பெயரையும் கொள்கையையும் இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துச் சென்று இந்நாட்டு முஸ்லிம்களின் உரிமையையும் உடமைகளையும் பள்ளிவாசல் உடைப்புகளையும், பர்தா உடையையும் ‘காவிக்கலர்’ கலகக்காரர்களின் கலாட்டக்களையும் ஏனைய எங்கள் பிரச்சினைகளையும் வெளிச்சம் போட்டு இன்றுவரை அரசாங்கத்தில் இருந்து காண்டு அடையாளப்படுத்தி வருகின்றார்.
வாழ்க முஸ்லிம் காங்கிரஸ் ! வளர்க விருட்சம் தரும் நமது மரம் !!

 
சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்
ஸ்தாபக பொதுச் செயலாளர்
முஸ்லிம் காங்கிரஸ்