சலீம் றமீஸ்
அக்கரைப்பற்று வலய பாடசாலைகளின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடசாலை சமூகங்கள்;, பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து செயல்படாது விட்டால் எதிர்காலத்தில் கல்வி துறையில் பாரிய பின்னடைவு எற்படக்கூடிய நிலமை உருவாகி வருகிறது.
மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை
அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் சிறந்த ஆளுமையுடனும், அர்;ப்பணிப்புடனும் பாடசாலைகளுக்கு அதிபராக தலைமை தாங்கி செயற்பட்ட அதிபர்களுக்கு திடீர் என மன உளைச்சல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதிபர் பதவியில் தொடர்ந்து பணி புரிய முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ள நிகழ்வுகள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது.
நமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த அதிபர்களுக்கு அரசியல்வாதிகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் காரணமாகவே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொத்துவில், அல் இர்பான் மகளிர் கல்லூரி, அக்கரைப்பற்று அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயம், அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய அதிபர்களுக்கு இந்த நிலமை ஏற்பட்டுள்ளது,
இதனால் சிறந்த பாடசாலைகளாக செயற்பட்டுவந்த இப் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடசாலை சமூகங்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் ஏ.எல்.கிதுறு முஹம்மட் தலைமையில் நடைபெற்ற போது கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்…..
சிறந்த முறையில் செயற்பட்டு வந்த அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளின், அதிபர்களுக்கும் ஏற்பட்டுள்ள இந்த நிலமை குறித்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடமும், கிழக்கு மாகாண சபையிலும் பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். கிழக்கு மாகாண சபைக்கு உச்ச அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி வரும் நாம் நமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பாவிக்காமல் உள்ளோம். இதனால் கிழக்கு மாகாண மக்கள், மக்கள் பிரதிநிதிகளின் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுனரிடம் அக்கரைப்பற்று வலயக் கல்வி செயற்பாடுகளுக்கு தீர்வு வேண்டி அக்கரைப்பற்று வலய முக்கியஸ்தர்கள் செல்ல வேண்டிய புதிய நிலமை கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ளது. இது குறித்து அக்கரைப்பற்று வலய பாடசாலைகளின் பாடசாலை சமூகங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் நாம் கவனயீனமாக செயல்பட்டால் பல வருட காலமாக தியாகத்துடனும், அர்ப்பணிப்புடனும் பாடுபட்டு வளர்த்தெடுத்த நமது அக்கரைப்பற்று வலய கல்வி வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலயத்தின் வளர்ச்சியில் நாம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் நல்ல எண்ணத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டதனால்தான் இன்றைய கால கட்டத்தில் அதன் அறுவடைகளை பெற்றுக் கொண்டிருக்கின்றோம். இக்கல்லூரி பிரதேச, வலய, மாகாண, தேசிய ரீதியில் பல சாதனைகளைப் பெற்று நமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இறைவன் கல்வி விடயத்தில் செயல்பட்டு உதவி புரிய நமக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான். குறுகிய காலத்தில் இக்கல்லூரி இப்பிராந்தியத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு நல்ல பெயருடன் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலமையினை உருவாக்க தியாக உணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட முன்னாள் கல்வி அதிகாரிகள், இக்கல்லூரியின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை சமூகங்களுக்கு மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நமது அபிவிருத்தி, கல்வி விடயங்களில் அரசியல் பேதமின்றி ஒத்துழைப்புக்களை நமது மக்களின் நன்மைகளுக்காக வழங்கி வருகின்றேன். இன்னும் ஒரு வருட காலம்தான் கிழக்கு மாகாண சபைக்கு ஆயுள் உள்ளது. இதன் பின்னர் நடைபெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் உறுப்பினர்கள் யார்? அமைச்சர் யார்? முதலமைச்சர் யார்? என்பது பற்றி யாருக்குமே தெரியாது. எனவே, அரசியல் அதிகாரத்தினை பயன்மிக்கதாக நமது மக்களுக்கு முடிந்தளவு நல்ல பணிகளை புரிந்து வருவதுடன், நல்ல பணிகளுக்கு எங்களின் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றோம்.
பெற்றோர்கள் நமது பிள்ளைகளின் கல்வி விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உலக கல்விக்கு காட்டும் ஆர்வத்துடன் குறிப்பாக நமது மார்க்க கல்விக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மார்க்க போதனையின் அடிப்படையில் வளர்ப்பதன் ஊடாகவே உலக வாழ்க்கையிலும் மறுமை வாழ்க்கையிலும் கற்கும் கல்வியினால் பயன் கிடைக்கும். நமது வீட்டுச் சூழலே நமது குழந்தைகளின் முதல் ஆரம்ப பயிற்சி கூடமாக அமைந்துள்ளது.
நாங்கள் அன்று பாடசாலை மாணவர்களாக இருந்த வேளையில் மாலை நேரத்தில் மஃரிப் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் இடையில் எல்லா வீடுகளிலும் குர்ஆன் ஓதுகின்ற வழமை இருந்தன. எங்கும் குர்ஆன் ஓதும் ஓசை கேட்டது. ஆனால் இன்றைய நவீன உலகத்தில் குர்ஆன் ஓதவேண்டிய நேரத்தில் நமது பிள்ளைகளும், பெற்றோர்களும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களில் அக்கறை காட்டி வருகின்றமை குறித்து நமது சமூகம் கவலை அடைய வேண்டியுள்ளது. எனவே வீட்டுச் சூழலை சீராக்குவதன் ஊடாகவே மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற முடியும்.
அக்கரைப்பற்று வலயத்தில் பெண்கள் கல்லூரிகளாக ஒலுவில் அல் ஜாயிஸா மகளிர் கல்லூரி, பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலயம், அட்டாளைச்சேனை அல்முனீறா பெண்கள் உயர்தர பாடசாலை, அக்கரைப்பற்று ஆயிஷா மகா வித்தியாலயம், பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆண்கள் , பெண்கள் இணைந்து கல்வி கற்கும் செயற்பாட்டினால் எமது சமூகம் இன்று பல சவால்களை எதிர்நோக்குகின்றது. எனவே எதிர்காலத்தில் பெண்களுக்கான தனியான பல கல்லூரிகள் அமைப்பதற்கான திட்டங்களை நாம் இப்போதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.