ஒபாமாவின் மாசு கட்டுப்பாட்டு திட்டத்துக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை !

Barack-Obama

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் மாசுகளை கட்டுப்படுத்தி, புவி வெப்பமயமாதலை தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கிணங்க அமெரிக்காவில் மின்சார உற்பத்தி நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைட்-ஐ (கரி அமில வாயு) கட்டுப்படுத்தும் புதிய திட்டத்தை அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் அறிவித்தார். 

இந்த திட்டத்தை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள 27 மாநிலங்களில் மின்சார உற்பத்தி செய்துவரும் தனியார் நிறுவனங்கள் கோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்தன. அந்த வழக்குகள் எல்லாம் தள்ளுபடியான நிலையில் அதிபரின் புதிய திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் இந்நிறுவனங்கள் மீண்டும் வழக்கு தொடர்ந்தன. 

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அதிபர் ஒபாமாவின் மாசு கட்டுப்பாட்டு திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு முடிந்து ஒபாமாவின் அறிவிப்பு சட்டரீதியாக செல்லுபடியாகத்தக்கதுதான் என நீதிபதி தீர்மானிக்கும் வரை மேற்கண்ட மின்சார உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும் என தெரிகிறது. 

அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு புதுமை திட்டங்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றிவரும் ஒபாமாவின் மாசு கட்டுப்பாட்டு திட்டத்துக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தடைவிதித்துள்ள செய்தி ஆளும்கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.