எஸ்.எம்.அரூஸ்
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் நல்லாட்சியின் அமைச்சர்களுள் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் அல் – ஹாஜ் கபீர் ஹாசீம் அவர்களின் தந்தை மர்ஹூம் பரிஸ்டர் அல் – ஹாஜ் ஏ.எல்.எம் ஹாசீம் அவர்களின் வரலாற்று ஆவணங்களைக் கொண்டு எழுதப்பட்ட வாழ்வியல் ஒரு நோக்கு எனும் நூல் வெளியீடும், துறைசார் சமூக சேவையாளர்கள் பாராட்டும் எதிர்வரும் சனிக்கிழமை(2016.02.13) அன்று அட்டாளைச்சேனை லொயிட் ஹோட்டலில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரிஸ்டர் ஹாசீம் பவுண்டேஷன் அமைப்பினர் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக ஏற்பாட்டாளரும், அம்பாரை மாவட்ட ஓமரங்காய்க்கண்ட விவசாய அமைப்பான “பாபிரண்”டின் செயலாளர் நாயகமுமான அல் – ஹாஜ்.எம்.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
பரீஸ்டர் ஏ.எல்.எம். ஹாசீம் தொடர்பான வாழ்வியல் ஒரு நோக்கு எனும் மகுடத்தில் வெளிவரும் இந்நூல் வெளியீடு பற்றிய பத்திரிகையாளர் மாநாடு நேற்று அக்கரைப்பற்று பரீஸ்டர் ஏ.எல்.எம். ஹாசீம் பவுண்டேஷன் நிலையத்தில் நடைபெற்றபோதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.
இதன் போது உரையாற்றிய செயலாளரும், எழுத்தாளரும், இந்நூலினை தொகுத்தவருமான அல் – ஹாஜ்.எம்.அப்துல் கபூர் கருத்துரைக்கின்றபோது,
கடந்த காலங்களில் கிழக்கிலங்கையில் சிறுபான்மைச் சமூகத்திற்குரிய காணிகளை பெரும்பான்மைச் சமூகத்தினர் கைப்பற்ற முற்பட்டபோதெல்லாம் ஓடோடி வந்து காப்பாற்றிய பெரும்தகை இவராவார்.
இவருடனும், இவரது குடும்பத்தவர்களுடனும் சுமார் 40ஆண்டுகள் உறவு கொண்டிருந்த காரணத்தினால் பரீஸ்டர் காசீம் அவர்கள் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி ஏனைய சமூங்களுக்கும் உதவியிருந்தார். அவரது செயற்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கிலான எனது இந்த ஆய்வுநூல் எதிர்கால சமூகத்திற்கும் பயன்பட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக இதனை பல ஆண்டுகள் முயற்சித்து எழுதியுள்ளேன்.
எவ்விதமான அரசியல்நோக்கமுமின்றி இதனை வெளியிட்டு அனைவரும் படித்து பயனடைய வேண்டுமென்பதே எமது நோக்கமாகும்.
அதுமாத்திரமன்றி எமது பிரதேச பறிபோன, பறிபோகும் நிலையிலிருந்த காணிகள் தொடர்பில் அவர் பல உதவிகளை செய்து மீட்டுத் தந்திருந்தார். இன்னும பல சமூகசேவைகளை மேற்கொண்டிருந்த பரீஸ்டர் அவர்களை இன்றைய இளம் சமூகமும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்நூல் வெளியிடப்படுகின்றது. என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் நஸீர் ஹாஜியார், தேசிய அமைப்பாளரும், தொழிலதிபருமான எம்.என்.எம்.நபீல், தவிசாளர் ஆதம்லெப்பை, பொருளாளர் சஹாப்தீன் உட்பட அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.