ஒரு பக்கம் சிங்களப் பேரினவாத அரசியல் பிடிக்குள் சிக்குண்ட சமூகமாகவும், மறுபுறம் ஆயுதக் குழுக்களின் அட்டகாச அடக்கு முறைக்கு அஞ்சி ஜீவ மரணப் போராட்டம் நடாத்திய சமூகமாகவும் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்திற்காகவும், விடிவுக்காகவும் அயராது உழைத்து, களைத்து இறுதியாக தன் உயிரை விண்ணுக்காகவும், உடலை மண்ணுக்காகவும் தியாகம் செய்த தனிப் பெரும் தலைவன், எம் சமூகம் நேசித்த போசித்த மாமனிதன் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் கடைசி இறுதி நாளில் தன் மரணத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு எனது தெமடகொட இல்லத்திறகு என்னைத் தேடிவந்து என்னோடு பகிர்ந்து கொண்ட விடயங்களை, அவர் வழங்கிய ஒசியத்தை முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதியும் தற்போதைய கால கட்டத்தின் தேவை கருதியும் இதனை எத்திவைக்கின்றேன் இவ்விடயங்கள் அனைத்தும் உண்மையென சத்தியம் செய்கின்றேன்.முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் எனது மாணவர் மட்டுமல்ல அவருக்கும் எனக்கும் இரத்த உறவு முறையான சொந்தமும் உண்டு. நான் அவரது ஆசிரியர் என்ற முறையிலும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க ஒருவர் தேவையென்ற முறையிலும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் என்னை நிர்வாக செயலாளராக நியமனம் செய்தார். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத கட்சியில் உள்ள பொறாமைக் குணம் கொண்ட சில பேர்கள் என்னையும், தலைவர் அவர்களையும் பிரித்துவிட்டனர்.
எனக்கும் அவருக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லாமல் பல மாதங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் 16.09.2000 ஆண்டு நான் சுபஹூ தொழுதுவிட்டு இருந்த போது தலைவரின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசித பெரேரா என்பவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவர் அவர்கள் எனது வீட்டுக்கு வருவதாக கூறிவிட்டதைத் தொடர்ந்து தலைவரும் எனது விருப்பத்தைக் கேட்டறிந்த பின்பு தெமடகொட வீட்டுக்கு வருகை தந்தார்.
16.09.2000ம் ஆண்டு காலை 7.35 மணியளவில் எனது வீட்டுக்கு வந்து 8.55 மணி வரை ஏறக்குறைய ஒன்றேகால் மணித்தியாலங்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் தடங்கலாக உள்ள மனிதர்கள், தனக்குப் பின் கட்சியின் தலைமைத்துவம் அமைய வேண்டிய விதிமுறைகள் போன்றவற்றையும் கூறி சில பேர்களின் தூண்டுதலினாலும், நிர்ப்பந்தத்தினாலும் நான் உங்களை இடைநிறுத்திவிட்டேன். அந்த தவறை நினைத்து வருந்துகின்றேன். ஆகவே என்னுடன் நீங்கள் மீண்டும் இணைந்து கொள்ள வேண்டும். சில பேர்களின் பெயரைக் கூறி இவர்கள் எல்லாம் எனது நம்பிக்கையைக் கெடுத்துவிட்டார்கள். இவர்களினால் இன்று கட்சி சீரழிவைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இந்தப் பொதுத் தேர்தலின் பின்பு இன்ஷா அல்லாஹ் இவ்வாறானவர்களை நீக்குவதற்கு தீர்மானித்துவிட்டேன் என்று கூறிவிட்டு இதுவரை காலமும் எனது உள்ளத்தை உறுத்திய விடயங்களை இன்று இறக்கி வைத்துவிட்டேன். இன்றைய நாளே எனது மன நிறைவான நாள் என்று என்னிடமும், எனது மனைவி பிள்ளைகளிடமும் போய் வருகின்றேன் என்று கூறிவிட்டுச் சென்ற எம் தலைவர் இன்று எம் மத்தியில் இல்லை. (அன்னாருக்கு அழகிய சுவனபதியான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக) தலைவர் குறிப்பிட்ட மனிதர்களில் சில பேர்கள் காலமாகிவட்டனர். சில பேர்கள் வேறு கட்சிகளோடு ஒட்டிக் கொண்டனர்.
தலைவர் அவர்கள் தனக்குப் பின் தலைமைததுவம் கண்டிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கே உரியதென்றும், அதுவே நியாயம் என்று கூறியதுடன் இது முடியாத பட்சத்தில் கிழக்கு மாகாணம் என்ற ரீதியிலும், இதுவும் சாத்தியப்படாத பட்சத்தில் வடமாகணத்தையும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமென்றும் கூறி வடகிழக்கு வாழ் முஸ்லீம்களின் அவல நிலையைக் கருத்திற் கொண்டு இக்கட்சியை உருவாக்க நினைத்ததாகவும், இதன் மூலம் தேசிய ரீதியில் வாழ்கின்ற முஸ்லீம்களின் விடயங்களையும் கையாள முடியுமென்றும் கூறினார். ஏனென்றால் எமது பகுதியில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் நானும் பாதிக்கப்பட்ட ஒருவன். சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சினைகளும் இம் மாகாணங்களிலேதான் காணப்படுகிறது. எனவே எக்காரணம் கொண்டும் இந்தத் தலைமைத்துவம் இப்பிரதேசங்களிலேதான் நியமனம் செய்யப்பட வேண்டும். அப்பொழுதான் இப்பகுதி முஸ்லீம்களுக்கு விடிவு கிடைக்கும், தைரியம் பிறக்கும். வேறு பிரதேச தலைமைத்துவத்திற்கு இப்பிரச்சினையைப் பற்றி உளப்பூர்வமாக உணர முடியாது. வேதனையை அனுபவிக்கின்ற பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே பொருத்தமானவர் என்றும் கூறினார்.
மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் இந்த ஒஸியத் விடயமாக தற்போதைய தலைவரிடம் பேசுவதற்காக நான் பல தடவைகள் சந்திப்பதற்காக முயற்சி செய்தேன். அவர் எனது சந்திப்பை புறந்தள்ளி வந்த காரணத்தால் இன்று நான் இதனை முஸ்லீம் சமூகத்தின் முன் எத்தி வைத்துள்ளேன். தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் என்னிடம் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மையானவை என அல்லாஹ்வின் மீது ஆணையாக உறுதி அளிக்கின்றேன்.
இவ்வளவு காலம் கடந்து எனக்கு இன்று ஞானம் பிறந்த காரணம் என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழலாம். அதற்கு பல காரணங்கள் உண்டு. தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து முஸ்லீம்கள் குழப்பமடைந்திருந்தனர். தலைமைத்துவப் போட்டி கட்சியை ஆட்டிப்படைத்தது. திருமதி பேரியல் அஷ்ரபும், தற்போதைய தலைவரும் இணைந்த தலைமைகளாக நியமிக்கப்பட்டு இறுதியில் சாய்ந்தமருதில் நடைபெற்ற அரசியல் மேடையில் வைத்து இவர் சில நபர்களினால் தேசிய தலைவராக முடி சூட்டப்பட்டதைத் தொடர்ந்து கட்சி பல பிரச்சினைகளையும் கட்டுக்கோப்புகளையும் இழந்தது. மட்டுமல்லாமல் இப்புதிய தலைமையோடு முரண்பட்டு பல பேர்கள் கட்சியில் இருந்து பிரிந்து வௌ;வேறு திசைகளில் சென்ற காரணத்தால் மக்கள் மத்தியில் கட்சி செயற்பாடு பலவீனமடைந்தது.
இந்த நிலையில் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கூறிய விடயத்தை பகிரங்கப்படுத்தி புதிய தலைமைத்துவத்திற்கு நெருக்கடி ஏற்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டும் கால ஓட்டத்தில் தலைமைத்துவம் சரியான பாதையில் செல்லலாம் அப்படிச் செல்லும் போது பிரிந்தவர்கள் மீண்டும் இணையலாம். ஆகவே ஒரு சந்தர்ப்பம் வழங்குவது நல்லது என்ற நன்னோக்குடன் தான் இவ்விடயங்களை இவ்வளவு காலமும் மூடி வைத்திருந்தேன். ஆனால் தற்போதைய தலைமைத்துவம் எடுக்கின்றன பிழையான தீர்மானங்களை முஸ்லிம்களின் மீது திணித்து நான் செய்வதையே சரியென்கின்ற ஒரு மாயை தோற்று விக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அடிக்கடி கூறிய தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இவ்விடத்தில் தற்போதைய கால கட்டத்தில் எவ்வளவு தூரம் நிஜப்படுத்தப்படுகின்றது என்பதை கூறுகின்றேன். சன் கிளாஸ் கண்ணாடிகளைத் தருகின்றோம் உங்கள் கண்களைத் தாருங்கள், தங்கத்தினாலான சப்பாத்துக்களைத் தருகின்றோம் உங்கள் கால்களைத் தாருங்கள் என்று அவர்கள் கேட்டால் இவைகளை இழந்து அவற்றினை பெற்றுக் கொள்ள இந்தத் தலைமைத்துவம் தயாரில்லை அவ்வாறான கோழைத்தனமான தலைமையும் நான் இல்லை என்று கூறினார்;.’
இன்று இந்த நாடு தேசியப்பிரச்சினையின் தீர்வை நோக்கி நகர்ந்து வரும் கால கட்டத்தில் எமக்கான பிரச்சினை விடயத்தில் தற்போதைய தலைமைத்துவத்தின் செயற்றிறன் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
எங்களுக்காக தன் உயிரை நீத்த எமது தலைவனுக்காகவும், நாம் இதுவரை காலமும் எடுத்த பிழையான தீர்மானங்களும் கொள்கைகளும் முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் வாதிகளை புத்திசாலிகளாக ஆக்கிய நிலையைவிட்டு நீக்குவதற்காகவும் நாம் செய்ய வேண்டிய தியாகம் தான் என்ன ? இறையடி எய்துவதற்கு முன்பு தலைவரினால் கூறப்பட்ட ஒஸியத்திற்குள் இதற்கான பதில் தெளிவாகத் தெரிகின்றது. அதைத் தேடுங்கள் அந்தத் தேடலில் கண்டுபிடிப்பு தற்போது பேசப்படும் தேசிய பிரச்சினையில் அது ஒரு முக்கிய பாத்திரத்தை வகுக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இதன் மூலம் சமூகம் விடிவுபெறும், பட்டுச் செல்லும் கட்சி நிச்சயம் பழைய விருட்ச்சமாகும்.
சிந்தனையைத் தூண்டுவது எமது நோக்கம். செயற்பட வேண்டியது நீங்களே தான்.
இப்படிக்கு,
கே.எல். அபூபக்கர் லெப்பை,
தொலைபேசி : 071 8342 188
முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகச் செயலாளர், கல்முனை ஸாஹிராக் கல்லூரி முன்னாள் அதிபர்,
கல்முனை உடற்கல்வி வட்டாரக் கல்வி பணிப்பாளர் (SLEAS)