முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியப்படுமா..??
ஒரு ஊரில் பல மீன் வியாபாரிகள் உள்ளனர்.அந்த ஊரில் மீன் கறியை சுவையாக்கக் கூடிய பொருட்களான உப்பு,புளி போன்றவற்றை பெற்றுக்கொள்வது கடினமாகும்.இதனால் தங்களது மீன்களை விற்கும் பொருட்டு அக் குறித்த மீன் வியாபாரிகளே மீனோடு சேர்த்து மீன் கறிக்கு சுவையூட்டும் பொருட்களையும் விற்று வருகின்றனர்.ஆனால்,அங்குள்ள ஒரு வியாபாரிக்கு மீன் மாத்திரமே கிடைக்கின்றது.இன்னுமொரு வியாபாரிக்கு உப்பு,புளி போன்ற சுவையூட்டிப் பொருட்கள் மாத்திரமே கிடைக்கின்றது.இந்த இருவரும் ஒன்றிணைந்தால் தான் தங்களது பொருட்களை அக் குறித்த ஊரில் விற்பனை செய்ய முடியும்.ஏனைய வியாபாரிகளுடன் போட்டி போட்டு தங்களது பொருட்களை விற்பனை செய்யவும் வேண்டும்.இவர்களை விட்டால் தங்களுக்கு ஆபத்து என பல வியாபாரிகள் இவர்கள் இருவரின் மீது தங்களது கழுகு பார்வையை செலுத்திக் கொண்டும் இருக்கின்றனர்.
இவர்களையும் மீறி தங்கள் பொருட்களை விற்பனை செய்வது மிகக் கடினமாகும்.இதனை அறிந்த இவ் இரு வியாபாரிகளில் ஒரு வியாபாரி மற்ற வியாபாரியை ஒன்றிணைந்து விற்பனை செய்ய அழைக்கின்றார்.இதனை மற்றய வியாபாரி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.மாறாக தான் சிறிது தேவைப்படும் ஏனைய வியாபாரிகளில் ஒருவரிடத்தில் சென்று தனது மீனையும் அவ் வியாபாரியின் மீனோடு ஒன்றிணைத்து விற்பனை செய்யக் கோருகின்றார்.முன்பெல்லாம் ஏறெடுத்தும் பார்க்காத அவ் வியாபாரி இதன் போது அவர் மீனோடு இவர் மீனையும் இணைத்து விற்க சம்மதம் தெரிவிக்கின்றனர்.தனித்து விற்க இயலாமல் தங்களிடம் வந்த இவருக்கு சிறு தொகையை கொடுத்தாலும் போதுமாகும்.இவர் கோரும் விலையை விட அவர்கள் விற்கப்போகும் விலை மிக அதிகமாகும்.இவர் மீனையும் ஒன்றிணைக்கும் போது பாரம் அதிகரித்து அவ் வியாபாருக்கு அதிக இலாபம் கிடக்கும்.ஒன்றிணைந்து விற்பனை செய்ய அழைப்பு விடுத்த வியாபாரி யாராவது தனது பொருட்களை கேட்கும் விலைக்கு விற்பனை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.இது தான் இன்றைய முஸ்லிம் அரசியற் தலைமைகளின் உண்மை நிலை.இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணையாமல் செயற்பட்டால் இதன் மூலம் ஏற்படப்போகும் பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்று.சில வேளை இதற்கு முஸ்லிம் சமூகம் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
இலங்கை நாட்டில் அரசியலமைப்பு மாற்றம் நிகழவுள்ளது.இதில் சிறுபான்மை இன முஸ்லிம்களை பாதிக்கக்கூடிய விடயங்கள் இடம்பெறாமல் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.இதனை உணர்ந்த இலங்கையின் முஸ்லிம் புத்தி ஜீவிகள் பலர் இலங்கை முஸ்லிம் அரசியற் தலைமைகளை ஒன்றிணைந்து செயற்படச் செய்ய தங்களாலான அதீத பிரயத்தனங்களை மேற்கொண்டும் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் றிஷாத் அவர்கள் இக் குறித்த விடயத்தில் அமைச்சர் ஹக்கீம்,முன்னாள் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப் மற்றும் அதாவுல்லாஹ் ஆகியோருடன் தான் இணைந்து செயற்பட தயார் என கூறி இருப்பதானது இக் காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.அமைச்சர் றிஷாத் இவ்வாறு கூறி இருப்பதானது தன்னைத் தாழ்த்தி அமைச்சர் ஹக்கீமை உயர்த்திக் காட்டுகிறது.இலங்கை முஸ்லிம்களின் பெரும் பான்மை ஆதரவைக் கொண்ட தலைமை மு.கா தலைமையா? அல்லது அ.இ.ம.கா தலைமையா? என்ற போட்டி உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் றிஷாத் சுய கௌரவம் பார்ப்பின் இதனைக் கூறி இருக்க மாட்டார்.இக் கூற்று மறை முகமாக அமைச்சர் றிஷாத்தின் செல்வாக்கை மக்களிடையே ஆழமாக நிலை நிறுத்தும் ஒரு விடயமும் கூட என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் றிஷாத் இணைந்து செயற்பட சுட்டிக்காட்டிய இம் மூவர் மாத்திரமல்ல அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ் விடயத்தில் கை கோர்த்து செயற்பட வேண்டும்.இன்று அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி பட்டங்களைப் பெற்றுக்கொண்டு அரசில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கின்றனர்.ஏதாவது அரசுக்கெதிராக கதைத்தால் தங்களது எதிர்கால அரசியல் வாழ்வு பாழ்பட்டு விடும் என்பதால் அரசின் சில செயற்பாடுகளைப் பார்த்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மனதுக்குள் வெம்பிக்கொண்டிருப்பதாகவும் அறிய முடியாது.முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களோடு சேர்த்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா,ஷூரா சபை,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி,அஷாத் சாலி மற்றும் முஸ்லிம் விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள்,புத்தி ஜீவிகள் என அனைவரையும் இவ் விடயத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.மேலும் முஸ்லிம் அரசியற் பலத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படின் இன்று முஸ்லிம்களிடையே தோற்றம் பெற்றுள்ள சிறு சிறு அரசியற் கட்சிகளையும்,செல்வாக்குள்ள தனி நபர்களையும் இணைத்துக் கொள்ளவதற்கு கூட எது வித சிறு தயக்கமும் யாருக்கும் இருக்கக் கூடாது.இவைகளும் ஒரு சிறு பலத்தை முஸ்லிம்கள் சார்பாக வழங்கும்.அதாவது முஸ்லிம் அரசியற் பலத்தையும் அறிவுப் பலத்தையும் ஒரு புள்ளியியில் குவித்து இவ் விடயத்தை முஸ்லிம் சமூகம் கையாளுவதே மிகவும் பொருத்தமானதாகும்.
2016.01.26ம் திகதி இந்த ஒன்றிணையும் அழைப்பை அமைச்சர் றிஷாத் விடுத்திருந்தார். இதற்கு மறு நாள் 2016.01.27ம் திகதி புல் மோட்டையில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மு.கா தலைமை தபால் வாக்களிப்புக்கு முஸ்லிம்களுக்கு வழி காட்ட தவறி இருந்த விடயத்தை சுட்டிக் காட்டி இது தான் ஒரு சமூகத்தின் தலைமையென மார்தட்டிப் பேசுபவர்களின் இலட்சணமா? போன்ற மு.காவை நையப்புடையும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.அண்மைக் காலமாக இது போன்று மு.காவினை ஆத்திரமூட்டும் பல்வேறு கருத்துக்களை அமைச்சர் றிஷாத் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஒன்றிணையும் அழைப்பை விடுத்து குறிப்பாக அமைச்சர் ஹக்கீமின் பதிலை எதிர்பார்த்து நிற்கும் அமைச்சர் றிஷாத் இது போன்று கதைப்பது பொருத்தமானதல்ல.அதாவது முழங்கையைப் பிடித்துக் காட்டி கறிக்கு பெரிய மீனை வாங்கி வா என்பது போன்று சைகை காட்டிவிட்டு பெரு விரலை சுட்டு விரலில் குத்தி சிறிய மீன் வாங்கி வா என பலரும் இருக்கும் போது யாருக்கும் தெரியாத வகையில் சைகை காட்டுவது போன்றே அமைச்சர் றிஷாத்தின் இவ் ஒன்றிணையும் அழைப்பை பார்க்கத் தோன்றுகிறது.அமைச்சர் றிஷாத் உளமாற இவ் அழைப்பை விடுத்திருந்தால் இனி வருங்காலத்திலாவது இவ்வாறான பேச்சுக்களை தவிர்ந்து கொள்வது ஏற்புடையதாக அமையும்.
இந்த அழைப்பிற்கு அமைச்சர் ஹக்கீம் பகிரங்கமான எது வித பதிலையும் வழங்கியதாக என்னால் அறிய முடியவில்லை.ஒரு சில இலத்திரனியல் ஊடகங்களில் அமைச்சர் றிஷாத்துடன் தான் இணையப்போவதில்லை என்று அமைச்சர் ஹக்கீம் கூறியதாகவும் வெளிவந்திருந்தன.சில நெருங்கிய தகவல்கள் அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறி இருப்பதை உறுதியும் செய்கின்றன.எதுவித வித பதிலும் வழங்காமையும் குறித்த அழைப்பை நிராகரிப்பதாகவே பொருள்படும்.அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் றிஷாத்துடன் இணையக்கூடாது என ஒரு சில மு.கா ஆதரவாளர்கள் கட்டுரைகளும் வரைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.இவர்களுக்கு நான் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.இவ் அரசியல் யாப்பில் ஏதாவது முஸ்லிம்களை பாதிக்கக் கூடிய ஒரு விடயமொன்று இடம்பெற்றால் பாதிக்கப்படுவது இத் தலைமைகள் அல்ல மாறாக இலங்கை வாழ் சாதாரண முஸ்லிம் குடி மக்கள்.இந்த இரு தலைமைகளும் மிகவும் வசதி படைத்தவர்கள்.அவர்களுடைய குடும்பங்களை உலகில் முன்னேற்றம் கண்டுள்ள முக்கிய நாடுகளில் வசிக்கச் செய்யுமளவு பொருளாதார வளமுடையவர்களாக உள்ளனர்.ஆனால்,சாதாரண மக்கள் அடித்தாலும் பிடித்தாலும் அவர்களுடைய ஆடு,மாடு,கோழி,நில புலன்களை வைத்துக்கொண்டு இந்த நாட்டில் தான் வாழ வேண்டும்.
அமைச்சர் ஹக்கீம் இந்த அழைப்பை நிராகரித்திருந்தால்,அவர் நிராகரித்தது அமைச்சர் றிஷாதின் கருத்தை அல்ல மாறாக ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் கருத்தையாகும்.எதிர்வரும் 2016-02-19ம் திகதி முஸ்லிம் அரசியற் தலைமைகளை ஒன்றிணைக்கும் முயற்சி ஒன்றை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செய்யப் போவதாக அறிய முடிகிறது.தற்போது நிராகரித்த அமைச்சர் ஹக்கீம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இம் முயற்சியையும் நிராகரிப்பாரா? என்பதுவே இங்குள்ள வினா.அப்படி நிராகரிப்பாராக இருந்தால் அதுவே மு.காவின் அஸ்தமனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.அவ்வாறில்லாமல் ஒன்றிணைந்தால் தனது இருப்பை பாதுகாக்க ஒன்றிணைந்ததாக பொருள்படும்.இருப்பினும் இதுவெல்லாம் சிந்திக்காமல் அனைத்து முஸ்லிம் தலைமைகளும் ஒன்றிணைய வேண்டும்.
இவர்கள் இருவரும் இதற்கு முன்பு ஒன்றிணையாதவர்களுமல்ல.தேர்தல் மாற்றம்,ஊவா மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றில் ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள் தான்.ஊவா மாகாணத்தைப் பொறுத்த மட்டில் அந்த மக்கள் பேரின கட்சிகளை ஆதரித்து பழக்கப்பட்டவர்கள்.இரு கட்சிகளும் வெவ்வேறாக பிரிந்து தேர்தல் கேட்டால் அந்த மக்கள் இவர்களை சிறிதும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை இருவரும் நன்கே அறிவர்.இருவரும் ஒன்றிணைந்து தேர்தல் கேட்கும் போது இக் கூட்டிற்கு ஒரு ஆசனம் கிடைப்பதற்கான வாய்ப்பிருந்தது (கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் இரட்டை இலை மிகக் குறுகிய வாக்குகளால் தனது ஆசனத்தை தவற விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது).அதிலும் குறிப்பாக ஒரு ஆசனம் கிடைக்கும் போது ஏற்கனவே ஒரு சிறு அடித்தளமுள்ள மு.காவிற்கே அவ் ஆசனம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.இதனையும் மு.காவினர் நன்கே அறிவர்.இது போன்ற ஒரு வழி முறையைத்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டகளப்பில் ந.தே.முவுடன் இணைந்து மு.கா கடைப்பிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.அன்று இணைவை ஆதரித்த மு.கா தலைமை இன்று ஏன் எதிர்க்க வேண்டும்.இக் கூட்டு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் வாக்குத் தரகர்களாக இவர்கள் இருவரும் வந்திருக்கின்றார்களா? என்ற சந்தேகம் மக்களிடையே உதித்திருந்தது.அமைச்சர் ஹக்கீமின் இவ் நிராகரிப்பை வைத்துப் பார்க்கும் போது அன்று ஒரு மூன்றாம் தரப்பு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதை உணர்ந்துகொள்ள முடிகிறது.அவ் அழுத்தத்தை வழங்கத் சாத்தியமான நபர் பக்கம் இன்று இவர்கள் இல்லை என்பதும் நாடறிந்த ஒரு விடயமாகும்.சமூகத்திற்காக ஒன்றிணைந்தார்கள் என்றால் இப் யாப்பு மாற்றத்தை விடவா ஒரு உறுப்பினரை பெறுவது முக்கியத்துவமிக்கது?
இது போன்றே தொகுதி வாரித் தேர்தல் முறை மாற்றம் வருகின்ற போது சிறு கட்சிகள் முகவரி அற்றுப் போய் விடும் நிலை இருந்தது.அதிலும் குறிப்பாக இவ் விடயம் சிறு பான்மை இன முஸ்லிம் கட்சிகளை அதிகம் பாதிக்கும்.இதன் போதும் இரு கட்சிகளும் ஒன்றிணைந்திருந்தன.அதாவது தங்களுக்கு பிரச்சினை எனும் போது இக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளன.ஏன் இவர்களால் ஒரு சமூகப் பிரச்சினைக்கு ஒன்றிணைய முடியாது? தனக்கென்றால் தான் சுளகு படக்கு படக்கெனுமாம் என்ற முது மொழி தான் இவ் விடத்தில் நினைவுக்கு வருகிறது.கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அமைச்சர் றிஷாதை தேசியத் தலைவர் என பலரும் புகழ் பாடிய போதும் இவ்வாறு அழைக்குமளவு அவரிடம் மக்கள் பலம் இருக்கவில்லை.கடந்த தேர்தல் மூலம் அவரது கட்சி ஐந்து ஆசனங்களை பெற்று தங்களது மக்கள் செல்வாக்கை நிரூபித்துள்ளது.இக் கட்சியை தங்களோடு குறித்த சில விடயங்களில் இணைத்துச் செல்லும் போது தன்னை இக் கட்சி விஞ்சு விடுமென அமைச்சர் ஹக்கீம் அஞ்சுகிறாரோ தெரியவில்லை.சர்வதேச ரீதியில் மு.காவே இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இவ் யாப்பு மாற்றம் தொடர்பான விடயம் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும்.இதன் போது சர்வதேச ரீதியில் இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளாக மு.கா கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.அமைச்சர் றிஷாத்தோடு இவ் விடயத்தில் இணைகின்ற போது அமைச்சர் றிஷாத்தையும் இப் பேச்சு வார்த்தை மேசைகளில் அமரச் செய்ய வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு அமைச்சர் ஹக்கீம் தள்ளப்படுவார்.இதன் போது அமைச்சர் றிஷாத்தும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தலைவர்களில் ஒருவராக அமைச்சர் ஹக்கீமினால் அறிமுகப்படுத்தப்படுவார்.இது அமைச்சர் ஹக்கீமின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு சிறந்ததுமல்ல.
முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சியாக மு.காவை இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டிருந்தாலும் அமைச்சர் ஹக்கீமின் இம் மறுப்பை ஓரளவு சரி என ஏற்றுக்கொள்ளலாம்.இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சி எது என்ற வினாவிற்கு எது வித பதிலையும் வழங்க முடியாது என்பதே உண்மை.ஒரு கட்சி தங்களை ஒரு சமூகத்தின் குரலாக குறிப்பிட குறைந்தது அந்த சமூகத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் ஆதரவையாவது பெற வேண்டும்.முஸ்லிம் மக்களின் வாக்குகள் மூலம் மு.காவில் ஐந்து,அ.இ.ம.காவில் நான்கு,ஐ.தே.கவில் ஐந்து,சு.கவில் ஒன்று என முஸ்லிம்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை இடத்திற்கு இடம் வெவ்வேறு காட்சிகளினூடாக தெரிவு செய்துள்ளனர் .முஸ்லிம்களுக்கென்று ஒரு பிரச்சினை எழுகின்ற போது அதனைத் தீர்க்க அக் குறித்த இடத்து மக்கள் செல்வாக்குப் பெற்ற பிரதிநிதிகள் உள் வாங்கப்படுவதே பொருத்தமானதாகும்.இதன் காரணமாக ஒரு குறித்த கட்சியை ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த குரலாக குறிப்பிட முடியாது.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் அதிக செல்வாக்குடன் உள்ள அம்பாறை மாவட்டத்தில் மு.கா சார்பாக மூன்று வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தனர்.இவர்களில் பிரதி அமைச்சர் பைசல் காசிம் 61401 வாக்குகளையே பெற்றிருந்தார்.முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் 16771 வாக்குகளை பெற்றிருந்தார்.அ.இ.ம.கா 33000 மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்தது.அதே போன்று தயா கமகே முஸ்லிம்களின் 20000 இற்கும் மேற்பட்ட “வாக்குகளையும் பெற்றிருந்தார்.அதாவது அம்பாறை மாவட்டத்தில் மு.காவிற்கு எதிராக 70000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.இப்படி பார்க்கின்ற போது அம்பாறை மாவட்டத்தில் கூட மு.காவை முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சியாக குறிப்பிட முடியாது.கண்டி மாவட்டத்தில் அமைச்சர் ஹக்கீமை விட அமைச்சர் ஹலீம் 10000 இற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார்.கொழும்பு மாவட்டத்திலே ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவே இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கண்டி,கொழும்பு மாவட்டங்களில் எக் கட்சி முஸ்லிம்களின் பிரதிநிதி என்றால் அது ஐ.தே.க என்பதே பொருத்தமானதாகும்.முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சியல்ல என்பதற்கு இப்படி ஆயிரம் நிறுவல்களைக் காட்டலாம்.
இவ் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் த.தே.கூ உடன் இணைந்து சாதிக்க முயற்சி செய்வது போன்று தோன்றுகிறது.அண்மையில் பிரித்தானியாவிலே இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மு.கா ஈடுபட்டிருந்தமை யாவரும் அறிந்த ஒரு விடயமே.முஸ்லிம்களும் தமிழ் மக்களும் சிறு பான்மை இன மக்கள் என்பதால் அனைத்து விடயங்களிலும் அவர்களோடு சேர்ந்து பயணித்து விட முடியாது.அவர்கள் உறவை அளவோடு தான் வைத்துக் கொள்ள வேண்டும்.இதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.முஸ்லிம்களுக்குத் தேவையான பல தீர்வை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தான் பெற்றுக் கொள்ள முடியும்.அண்மையில் த.தே.கூ வின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தமிழ்ப் பேரவையின் தீர்மானத்தைக் கூட தாங்கள் பரிசீலிப்பதற்குத் தயார் எனக் கூறி இருந்தார்.அவர்கள் தங்கள் பலத்தை எப்படி எல்லாம் அதிகரிக்க வேண்டுமோ அத்தனை வழிகளிலும் அதிகரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால்,முஸ்லிம் தலைமைகள் நிராகரித்துக்கொண்டிருக்கின்றன.முஸ்லிம் தலைமைகள் தமிழ்த் தலைமைகளைப் பார்த்தாவது சிந்திக்க மாட்டார்களா?
2002 ம் ஆண்டு அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது ரணில் தலைமையிலான அரசு முஸ்லிம்களை ஒரு சிறு குழு எனக் குறிப்பிட்டு முஸ்லிம்களை புறக்கணித்திருந்தது.இது பற்றி தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமகிங்கவிடம் தீர்வு கேட்டுச் சென்ற போது அன்டன் பால சிங்கத்திடமும்,பிரபாகரனிடமும் தீர்வைப் பெறுமாறு கூறி இருந்தார்.வில்பத்து பிரச்சினை பாரிய பூதாகரமாக சென்று கொண்டிருக்கும் போது பிரதமர் வாய் மூடி மௌனம் தான் காக்கின்றார்.ஜனாதிபதியோ மாடு அறுப்பைக் கிளறி இன வாதிகளுக்கு தீனி போடுகிறார்.முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை பிழையானது என சுமந்திரன் கூறிய கருத்தால் த.தே.கூவிற்குள் பாரிய பூகம்பமே வெடித்திருந்தது.இவர்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கான நியாயமான தீர்வை அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்காது காலடியில் கொண்டுவந்து தருவார்கள் என்று நம்பினால் அது மடமையைச் சாரும்.மயிலை இறகு போடு எனக் கேட்டால் ஒரு போதும் இறகு போடாது.பிடிங்கித் தான் எடுக்க வேண்டும்.இன்று எமக்குள்ள ஒரே ஒரு பலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தான்.அதைத் வைத்தே நாம் எமது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.இதற்கு முஸ்லிம் அரசியற் தலைமைகள் ஒன்றிணைவதைத் தவிர வேறு வழி இல்லை.நாட்டுக்காக சு.காவும் ஐ.தேவும் ஒன்றிணைய முடியுமாக இருந்தால் தங்கள் மக்களுக்காக பல கட்சிகள் இணைந்து த.தே.கூவை உருவாக்க முடியுமாக இருந்தால் ஏன் ஒற்றுமையை போதிக்கும் இஸ்லாத்தில் இருந்து கொண்டு முஸ்லிம் தலைவர்களால் ஒன்றிணைய முடியாது? முஸ்லிம் தலைமைகளே தங்கள் மக்களுக்காக ஒன்றிணையுங்கள்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
09-02-2016 – நவமணி