உலகில் முதன்முறையாக ‘ஸிகா’ வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசில் நாட்டில் மட்டும் இப்படி 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஸிகா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 3177 பேர் கர்ப்பிணிப் பெண்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இங்கு மட்டும் மேலும் 6 லட்சம் பேர் ஸிகா பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுமார் 40 லட்சம்பேரை ஸிகா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் அதற்கு சிகிச்சையும் இல்லை. வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியும் இல்லை என்பதால் உலக நாடுகள் அலறுகின்றன.
உலக சுகாதார நிலையம் சர்வதேச அவசரநிலையை பிரகடனம் செய்து உள்ளது. ஒருபுறம் உலக நாடுகள் தடுப்பு மருந்துக்கான தேடுதலில் தீவிரம் காட்டி வருகின்றன. மற்ற உலக நிறுவனங்கள் ஸிகா வைரஸ் தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஸிகா வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மிகவும் முக்கியம் வாய்ந்த நடவடிக்கையாக ஐதராபாத் ஆய்வு விஞ்ஞானிகள் உலகில் முதன்முறையாக ஸிகா வைரசுக்கு எதிராக இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் கிருஷ்ணா எல்லா இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசுகையில், “உலகில் முதலாவதாக ஸிகா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடித்த நிறுவனம் நாமாக இருக்கலாம், சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பே மருந்தை பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.
உலகில் ஸிகா வைரஸ் நோய்த்தொற்று தோன்றுவதற்கு முன்னதாக கடந்த ஆண்டிலேயே அதிகாரப்பூர்வமாக ‘ஸிகா’ வைரஸ் மாதிரியை இறக்குமதி செய்து இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளோம். இந்த மருந்தை விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் அளித்து பரிசோதிக்க இந்திய அரசின் ஆதரவை நாடியுள்ளோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உதவிசெய்ய முன்வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், பாரத் பயோடெக் ‘ஸிகா’ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்து உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை நாங்கள் அறிவியலாளர்கள் கருத்தின்படி ஆய்வுசெய்ய வேண்டும், ஆய்வை மேலும் முன்நோக்கி எடுத்துசெல்லும் சாத்தியத்தை பார்க்கவேண்டும். இது ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்புக்கு ஒருநல்ல உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இதுவரை ‘ஸிகா’ வைரஸ் தாக்கம் யாருக்கும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த புதிய தடுப்பு மருந்து உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த ஸிகா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானியான கிருஷ்ணா எல்லா என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டம்பெற்று தாவர தடயவியலில் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார். தெற்கு கரோலினாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, இவரை தனது தாய்நாடான இந்தியாவுக்கு திரும்பிவந்து ஏதாவது நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு கிருஷ்ணாவின் தாயார் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு எளிதில் சம்மதிக்காத கிருஷ்ணாவிடம் அவரது தாய் என்ன கூறினார் தெரியுமா..?
மகனே, உன் வயிற்றின் அளவு வெறும் ஒன்பது அங்குலம்தான். நீ எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், அதற்குமேல் உன்னால் சாப்பிட முடியாது. நீ நம் நாட்டுக்கு திரும்பிவந்து என்ன வேண்டுமானாலும் செய். என் இறுதி மூச்சுள்ளவரை உன்னை பட்டினியாக கிடக்க விடாமல் உனக்கு சாப்பாடு கிடைக்க நான் வழி செய்கிறேன் என கூறிய கிருஷ்ணா எல்லாவின் தாயார் அவரது மனதை மாற்றினார்.
பின்னர், ஒருவித வைராக்கியத்துடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய இவர், ஐதராபாத்தில் பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் பொருளாதார முதலீடு உள்ளிட்ட பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட கிருஷ்ணா எல்லா, இன்று 10 கோடி அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிர்வாகத்தின் தலைவராக சப்தமில்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறார்.
புதிய நோய்கள் உருவாவதற்கு முன்னரே அவற்றுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அதிக முதலீட்டை செலவிட்டுவரும் கிருஷ்ணா எல்லாவின் தீவிர முயற்சியின் விளைவாக உலகிலேயே மிக குறைந்த விலையில் ஹெபிடைட்டிஸ் பி வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இவரது நிறுவனம் கண்டுபிடித்தது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தை தடுக்கும் சொட்டு மருந்து, ரோட்டா என்ற வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து ஜப்பானிய என்செபாலிட்டிஸ் எனப்படும் கொசுவால் பரவும் வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தையும் இவரது தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 3.5 பில்லியன் யூனிட் போலியோ சொட்டு மருந்தை இந்த நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
உலகையே அச்சுறுத்திய சிக்கன் குன்யா நோய்க்கு காரணமான வைரஸ் கிருமி எது? என்பதை இவரது ஆய்வகம்தான் முதன்முதலாக கண்டுபிடித்தது.
தற்போது, ஸிகா நோய்க்கு எதிரான இரண்டுவகை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, ‘மேக் இன் இந்தியா’ என்ற லேபிளுடன் உலக நாடுகளுக்கு அனுப்பவுள்ள கிருஷ்ணா எல்லாவின் சாதனை முயற்சியில் அவர் வெற்றிபெற வாழ்த்த வேண்டியது, தமிழர்கள் என்ற வகையில் நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்!