இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்யியும் கொழும்பு வந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் அனைத்துவிதமான தலையீட்டுக்கும் முட்டுக்கட்டை போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது சீனா.
நல்லெண்ண பயணமாக இந்தியாவின் போர்க்கப்பல்கள் போனால் உடனே சீனாவின் கப்பல்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய அதிகாரிகள் குழு இலங்கைக்கு சென்றாலும் சீன அதிகாரிகள் குழு திடீரென இலங்கையில் வந்திறங்கும்.
இதேபோல்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 2 நாட்கள் பயணமாக இலங்கை சென்று அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் திடீரென சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இன்று இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள்தான் நடைபெற்றது.
அதுவும் 4 ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு சீனா செல்லும் வழியில் அவர் சென்ற விமானம் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தது.
இந்த இடைவெளியில் கொழும்பு விமான நிலையத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை வரவழைத்து சந்தித்திருக்கிறார் வாங்யி.
இலங்கையில் சுஷ்மா சுவராஜ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசேன் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ள நிலையில் சீன அமைச்சரும் ‘நாங்களும் இருக்கிறோம் என்பதைப் போல காட்டிவிட்டு சென்றதால் இலங்கை வெளிவிவகாரத்துறை வெலவெலத்துப் போனது.