இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் தினேஸ்காந்த் திமொத்தி நிதுர்ஷன் கலந்து கொள்கிறார்.
இன்று 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும்.
இன்றைய தினம் மாலை 5 மணிக்கு இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறுகின்ற இப் போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மட்டக்களப்பின் சின்ன உப்போடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 24 வயதுடைய திமொத்தி நிதுர்ஷன் தனது ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மட். புனித மிக்கேல் கல்லூரி- தேசியப்பாடசாலையிலும் கற்றார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பணியாற்றிவரும் திமொத்தியின் தந்தையான எஸ்.எல்.தினேஸ்காந்தை தனது றோல் மொடலாகக் கொண்டு சிறுவயது முதலே கூடைப்பந்தாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
அதன் பலனாக 2004ஆம் ஆண்டு முதல் பாடசாலை மட்டத்திலும், வலயம், மற்றும் மாவட்ட மட்டங்களிலும் பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு 13 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கான தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி அணியில் விளையாடினார். அப் போட்டியில் கல்லூரி அணிக்கு 2ஆம் இடம் கிடைத்தது.
அதனையடுத்து 2005ஆம் ஆண்டு 19வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டியில் தேசிய ரீதியிலான பாடசாலை கூடைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடி தங்கப்பதக்கம் கிடைத்தது. இப்போட்டியில் சிறந்த வீரராகவும் திமொத்தி நிதுர்ஷன் தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி, 2011ம் ஆண்டு முதல் 2013 வரை கடற்படை அணிக்காக விளையாடினார். 2013முதல் டீ.எப்.சீ.சீ. அணிக்காக விளையாடினார். அதன் மூலம் ஹம்பாந்தோட்டை கால்ற்ரன் அணிக்காக விளையாடும் வாய்ப்பு திமொத்தி நிதுர்சனுக்குக் கிடைத்தது.
இவ்வாறான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் திமொத்தி நிதுர்சன 2014ஆம்ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 23ஆவது விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்காக விளையாடச் சென்றார். இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
2015ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 24ஆவது விளையாட்டுப் போட்டியில் இலங்கை தேசிய அணி சார்பில் திமொத்தி நிதுர்ஷன் கலந்து கொண்டார். அந்தப் போட்டியில் இலங்கை கூடைப்பந்தாட்ட அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
அந்த ஒழுங்கில் இவ்வருடம் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறும் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் திமொத்தி நிதுர்ஷன் முக்கிய வீரராகப் பங்கு கொள்கிறார்.
அந்த வகையில் முதலாவது தடவை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் தேசிய அணியில் பங்கு பெறும் மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் என்ற பெறுமையை திமொத்தி நிதுர்ஷன் பெற்றுக் கொள்கிறார்.
இலங்கை கூடைப்பந்தாட்ட அணியின் முக்கிய வீரராக உள்ள அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கூடைப்பந்தாட்ட சமகால வெற்றிகளுக்கும் முக்கியமான வீரராகவும் திமொத்தி விளங்குகிறார்.
தேசிய அணியில் தனது மகன் பங்கு பற்றுவது குறித்து தந்தையான எஸ்.எல்.தினேஸ்காந்த், தாயான லொறேற்றா லோஜினி ஆகியோர் தமது மகிழ்ச்சியினை வெளியிடுகின்றனர்.
இதுவரையில் 19 தங்கம், 7 வெள்ளி, 7 வெணகலம் அடங்கலாக 33 பதக்கங்களை வென்றுள்ள திமொத்தி நிதுர்சனின் பயிற்றுவிப்பாளர்களாக மல்கம் டிலிமா, விரேன் சரவணமுத்து, சுரேஸ் றொபட் ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.
திமோத்தியின் சகோதரரும் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரருமான 15 வயதுடைய யூஜின் டிலக்சன் கடந்த 2013ஆம் ஆண்டு மவுண்ட் லவனியா புனித தோமஸ் கல்லூரியில் நடைபெற்ற கிறவுதர் கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக புனித மிக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியில் சென்றிருந்து வேளை நீச்சல் தடாகத்தில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1984 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இப்போட்டி அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்தப்பட்டு வருகிறது.
இதில் இந்தியாவிலிருந்து 519 பேரும், இலங்கையிலிருந்து 484 பேரும், பாகிஸ்தானிலிருந்து 337 பேரும், ஆப்கானிஸ்தானிலிருந்து 254 பேரும், பங்களாதேஷிலிருந்து 409 பேரும், பூட்டானிலிருந்து 87 பேரும், நேபாளத்திலிருந்து 398 பேரும், மாலைதீவிலிருந்து 184 பேரும் பங்கேற்கவுள்ளனர்.
12 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 23 விளையாட்டுகளில் 228 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 2,672 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் முதல்முறையாக சம அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.