தகவல் தொடர்பு சாதனங்களின் பாவனையால் மாணவர்களின் கல்வி பாழ்பட அனுமதிக்க முடியாது !

12651369_548635598635823_6973733966395792363_n_Fotor

 

ஊடகப் பிரிவு 

 

 நவீன தொடர்பு சாதனங்களில் தேவைக்கதிகமாக மாணவர்கள் மூழ்கியிருப்பது, கலாச்சார விளுமியங்களிலிருந்து அவர்களது கவனத்தை திசை திருப்புவதுடன், கல்வித் தேடலுக்கான ஆர்வத்தையும் வெகுவாகக் குறையச் செய்யும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். 

கொழும்பு மாவட்ட மதரஸா மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு விழா, புதுக்கடை, பெல்மன்ற் வீதி சந்தியில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 

றிசாத் பதியுதீன் பௌண்டேஷன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழாவில் பிரதி அமைச்சர் அமீர் அலி, அ.இ.ம.க செயலாளர் நாயகம் சுபைர்டீன், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அணீஸ், சீமெந்துக் கூட்டுத்தாபன செயற் பணிப்பாளர் ரியாஸ் சாலி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யூசுப் கே.மரைக்கார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

rizard

கொழும்பு மாவட்டத்தில் திறமையான, ஆற்றலுள்ள மாணவர் சமுதாயம் இருக்கின்றது. எனினும் அவர்களின் கல்வி மிகவும் கீழ் நிலையில் இருப்பதற்குக் காரணம், அவர்கள் கல்வியில் காட்டும் மிகக் குறைவான அக்கறையும், பெற்றோர்களின் அலட்சியப் போக்குமேயாகும். 

பொதுப் பரீட்சைகளிலும், புலமைப் பரிசில்களிலும் இவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய வகையிலேயே சித்தி பெறுகின்றனர். கல்வியின் அடைவுமட்டம் இவ்வளவு குறைவாக இருப்பதற்கு வறுமை மட்டும் ஒரு காரணமில்லை. 

கிராமப்புறங்களிலும் முஸ்லிம் மாணவர்கள், எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் கற்று டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும் பரிணமிக்கும் போது, கொழும்பு மாணவர்கள் சிறு வயதிலேயே கல்வியை இடை நிறுத்தி, தொழில் செய்யும் நிலை நமது சமூகத்துக்கு ஆபத்தானது.

இந்த நிலையை மாற்றியமைக்கவே நாம் சில திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த காலங்களின் ஆய்வுகளின் அடிப்படையில், நாம் பெற்றுக்கொண்ட தகவல்கள் கொழும்பு மாணவர்களின் கல்வி வீழ்ச்சியையும், கல்விக் குறைப்பாடுகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. அவற்றை இன்னும் ஒரு சில வருடங்களில் நிவர்த்தி செய்யும் திட்டங்கள் எம்மிடமுண்டு. எனினும் இதற்குப் பெற்றோர்கள் ஆகிய உங்களின் பாரிய ஒத்துழைப்பு வேண்டும். 

12670858_548599221972794_3732664893120243089_n_Fotor

பிரதானமாக தாய்மார்கள் பிள்ளைகளின் கல்வி விடயத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும். தண்டிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர்களைத் தண்டிக்கத் தயங்கக் கூடாது. தனது பிள்ளைகளின் கல்விக்கு உத்வேகமாக இருக்க வேண்டும். நமது பெண்கள் அற்ப சந்தோஷங்களுக்காகவும், தற்காலிக நிம்மதிக்காகவும் தொலைக்காட்சிகளில் பொழுதை கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிள்ளைகளின் சீரழிவுக்கு இதுவும் காரணம். மாணவர்களின் கைகளில் மொபைல் போன்களையும், வேறு நவீன சாதனங்களையும் கொடுத்து பாலாக்கும் துரதிஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

பச்சிளங் குழந்தைக்கு விளையாட்டுப் பொருட்களை கொடுப்பதற்குப் பதிலாக, மொபைல் போன்களை கொடுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் தற்போதைய முஸ்லிம்களின் சனத்தொகை 365000 என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் கல்வித் தேவைக்காக 13 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. கிட்டத்தட்ட இதே அளவு முஸ்லிம்கள் வாழும் அம்பாறை மாவட்டத்தில், அவர்கள் கல்வியில் உயர்வான நிலையில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் மாணவர்களின் விடா முயற்சியும், பெற்றோர்கள் அவர்கள் மீது கொண்டுள்ள அதீத அக்கறையும், தியாக மனப்பான்மையுமாகும். 

புதுக்கடை என்பது புகழ் பெற்ற இடம். சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், இதே இடத்தில் கொழும்பு மாணவர்களின் கல்வி பற்றி பிரஸ்தாபித்து நாம் சில விடயங்களைக் கூறினோம். எனினும் அதனை செயற்படுத்த காலதாமதம் ஆகிவிட்டது. தொடர்ந்து எமது சமூகத்தின் மீதான இனவாதிகளின் கொடூரங்கள், அவர்களின் வெறியாட்டம், பிழையான பார்வை போன்றவற்றுக்காக எதிர்த்துக் குரல் கொடுத்து, அதனை நிவர்த்திக்க வேண்டிய இக்கட்டில் தள்ளப் பட்டோம். இனியும் கொழும்பு முஸ்லிம்களின் பின்னடைவைக் கண்டு, நாம் கை கட்டி இருக்க முடியாது. அரசியளுக்காகவோ, பிரதிபலன்களை எதிர்பார்த்தோ இந்த முயற்சியை ஆரம்பிக்கவில்லை. 

12661810_1238359806180212_6453765311796821226_n_Fotor

இலங்கை வாழ் முஸ்லிம்களின் கல்விக்கு உயிரூட்டிய மகான்களான சேர்.ராசிக் பரீட், டி.பி.ஜாயா போன்றவர்களை நினைத்துப் பார்க்கின்றோம். அவர்கள் காலாகாலமாக வாழ்ந்த இந்த பூமியில், கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை எமக்குக் கவலை தருகின்றது. இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கு எழுச்சி ஊட்டிய நமது முஸ்லிம் சொத்துக்களான டாக்டர்.பதியுதீன் மஹ்மூத், மாதலைவர் அஷ்ரப் ஆகியோரின் மறைவின் பின்னர் நமது சமூகம் அரசியலிலும், கல்வியிலும் குட்டிச்சுவர் ஆனது. 10 சதவீதமாக வாழும் நாம், எமது விகிதாசாரத்துக்கு ஏற்ப துறையாளர்களையும், கல்விமான்களையும் உருவாக்கத் தவறியுள்ளோம். ஆனால் சிறைச்சாலைகளில் 28 சதவீதத்தால் நிரம்பி இருக்கின்றோம்.

இஸ்லாம் அழகான மார்க்கம். பெருமானார் நமக்கு போதித்த வழியில் நாம் வாழ வேண்டும். கற்ற சமூகம் என்ற பெயர் எடுக்க வேண்டும். குற்றச் செயல் புரியும் சமூகம் என்ற பெயர் நமக்கு வரவே கூடாது. இதை ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

கல்வியின் ஊடாகவே சமூக அந்தஸ்தைப் பெறலாம். இன்னும் அடிமைச் சமூகமாக, மற்றவர்களிடம் கையேந்தும் சமூகமாக, ஜய வேவா போடும் சமூகமாக இருக்காமல் சொந்தக்காலில் நிற்கும் சமூகமாக நாம் மிளிர வேண்டும் என அமைச்சர் றிசாத் கூறினார்.