நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணி !

Zaid_02
 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இலங்கை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியினர் கொழும்பில் நாளை சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இலங்கை வரவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், இராஜதந்திர சமூகத்தினர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவினர் ஆகிய தரப்புகளைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். 

விசேடமாக முப்படைத் தளபதிகளையும் இவர் தனது விஜயத்தின்போது சந்திக்கவுள்ளார். 

நாளையும், நாளை மறுதினமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஹுசைன் அங்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். 

அதுதவிர, போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, மஹிந்த ஆதரவு பொது எதிரணியினர் ஹுசைனை சந்திப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். எனினும், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஹுசைன் இலங்கை விடயத்தில் மிதமிஞ்சி செயற்படமுடியாது எனத் தெரிவித்துள்ள மஹிந்த ஆதரவு பொது எதிரணியினர், அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். 

கொழும்பு 07, நகர மண்டபம், லிப்டன் சுற்றுவட்டத்துக்கு முன்னால் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் மஹிந்த ஆதரவு பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். 

விசேடமாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று மஹிந்த ஆதரவு பொது எதிரணி தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

 ‘இராணுவச் சிப்பாய்களை பலிக்கடாவாக்க வரும் ஹுசைனுக்கு எதிராக வீதியில் இறங்குவோம்’ என்ற தொனிப்பொருளில் சிங்கள மொழியிலான சுவரொட்டிகள் கொழும்பில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.