கண்டியில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் சொந்த ஊருக்கு சென்று சில காலம் ஓய்வு பெற்றுக்கொண்டேன். மக்கள் அழைத்த சந்தர்ப்பங்களில் அரசியலில் ஈடபட்டிருந்தேன்.
எனினும் இனி எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபடவுள்ளேன். ஊருக்குச் சென்று அமைதியாக இருந்த போது மூன்று மாதங்களாக எனக்கு எதிராக சேறு பூசப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்டது.
பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை அரசியலுக்குள் மீளவும் இழுத்து விட்டார்கள். நான் அரசியலுக்குள் வந்து விட்டேன். இனி எனது அரசியல் பயணத்திற்கு பிரேக் கிடையாது.
பயங்கரவாத நிதி இலங்கையில் முதலீடு செய்யப்படும் என்ற அச்சத்தில் நான் நிதிச் சலவை குறித்த சட்டத்தை கொண்டு வந்தேன். அந்த சட்டத்தின் கீழ் எனது மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சட்டத்தில் மொத்தமாக ஏழு விடயங்கள் ஊடாக பணம் சம்பாதித்த நிதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விற்பனை, 16 வயதுக்கும் குறைந்த சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்தல், ஆயுத விற்பனை போன்ற விடயங்கள் உள்ளடங்குகின்றன.
இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே யோசிதவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதாவது சீ.எஸ்.என் தொலைக்காட்சி போதைப் பொருள் விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளது. அது ஊடகப் பணியில் ஈடுபடவில்லை.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஒரே மனிதனின் மகன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார் என்பதுதான் நல்லாட்சியாகும். கடந்த காலங்களில் நான் செய்த பிழைகளை நினைத்துப் பார்க்கின்றேன்.
பிரேமதாசவின் மகள் கள்ளநோட்டு அடித்து பிடிப்பட்ட போது நான் கண்டுகொள்ளவில்லை. ஜனாதிபதியின் மகன் பாசிகுடாவில் பிரச்சினை ஒன்றில் சிக்கிய போது அதனை நான் பொருட்படுத்தவில்லை.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் அமைதி பேணியதே நான் செய்த தவறாகக் கருதுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.