ஊடகப்பிரிவு ஊடாக ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களுக்காக குரல்கொடுக்கும் தேச பக்தர்கள் பீல் மாஸ்டர் சரத் பொன்சேகா கைதுசெய்யப்படும் போது யாருடைய சால்வைக்குள் ஒளிந்திருந்தார்கள் என கேள்விஎழுப்பினார் திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்.அண்மையில் திருகோணமலை மட்கோ பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் கூட்டட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்….
எமது கட்சி தலைமையிலான ஆட்சி ஏற்பட்டு அண்மையில்தான் ஒரு வருடம் பூர்த்தியடைந்தது கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சர்வதிகார சூழ்நிலையை இப்போது மெல்ல மெல்ல மாற்றியமைத்து கொண்டு வருகிறோம்.ஆனால் இப்போது நாம் செல்லுமிடமெல்லாம் எங்களிடம் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்வி உங்கள் ஆட்சியிலும் இனவாத குழுக்களின் செயற்பாடு அதிகரித்துள்ளதே. அவற்றை கட்டுபடுத்த நல்லாட்சி அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையே என்பதுதான்
முதலில் நீங்கள் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் இந்த இனவாதகுழுக்கள் கடந்த அரசாங்கத்தில் அரச ஆதரவுடன் இயங்கின.இந்த ஆட்சியில் எதிர்கட்சியிலுள்ள சில அரசியல் அனாதைகளின் ஆதரவுடன் இயங்குகின்றன.இந்த ஆட்சியில் நாங்கள் உறுதி செய்த ஜனநாயகம் ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள் .எஹலியகொட சம்பவத்தை முன்பக்க செய்தியாக பிரசுரித்தவர்கள் ஹோமாகம சம்பவத்தை பற்றி வாய்திறக்கவில்லை. எஹலியகொட சம்பவத்தை முன்பக்க செய்தியாக வெளியிடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.இதையே நாங்களும் விரும்புகிறோம் இது ஊடக சுதந்திரம்.ஆனால் ஹோமாகம சம்பவத்துக்கும் இதே முக்கியத்துவத்தை கொடுக்காதபோதே போதே பாரிய சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.இதன் பின்னால் பாரிய அரசியல் சூழ்ச்சி காணப்படுகிறது.ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு வெள்ளைவேன் அனுப்பப்படும்போது , லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்போது, ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட போது இவர்கள் எங்கே சென்றார்கள்.அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரல்களுக்கு அமைய செயற்படாமல் ஊடகங்கள் அனைத்தும் சுயாதீனமாக செயற்படும் காலம் மலர வேண்டும்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்ககுக்காக குரல்கொடுப்பதாக கூறி ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் சில தேச பக்தர்கள் குழப்பம் செய்தனர். பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா கைதுசெய்யப்படும் போது இவர்கள் யாருடைய சால்வைக்குள் ஒளிந்திருந்தார்கள்.இவர்களுக்கு பின்னால் இனவாதத்தை தூண்டி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் ஒரு கூட்டம் காணப்படுகின்றது.காவியுடை அணிந்தவர்களை தூண்டிவிட்டு நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.இந்த இனவாதத்தின் மூலமே அவர்கள் ஆட்சியை இழந்தார்கள் என்பதை அவர்கள் நினைவு வைத்துக்கொள்ளட்டும்.
நாட்டில் புதிதாக தோன்றியுள்ள சிங்கங்கள் சிலருக்கு நோபல் பரிசு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.நான் படிக்கும் காலத்தில் நான்கு வகையான குருதியினங்களே காணப்பட்டன.ஆனால் இவர்கள் புதிய குருதி வகை ஒன்றை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளனர்.சிங்க லே என்ற குருதியினத்தை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் இவர்கள் .
அண்மையில் எமது முன்னால் ஜனாதிபதியின் செய்தி ஒன்றை பத்திரிகைகளில் பார்க்க முடிந்தது.அரசியலமைப்பை மாற்ற முன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்க வேண்டுமாம்.இரண்டு முறை ஜனாதிபதியாக பதவிவகித்த ஒரு சட்டத்தரணிக்கு நிறைவேற்று அதிகாரமும் அரசியல் அமைப்பிலே உள்ளதென்பது தெரியாமலிருப்பது வேடிக்கையே.அதிகாரத்தை இழந்த பின் இவரின் கூற்றுகளுக்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமலே உள்ளது.இவர் ஒன்றும் நாட்டின் நலனுக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்க சொல்லவில்லை நாட்டின்மீது உண்மையான அக்கறையிருப்பின் அவரின் ஆட்சி காலத்திலேயே இதை இல்லாதொழித்திருப்பார்.இவரது நோக்கம் அதிகாரமிக்க பிரதமர் பதவியை கைப்பற்றி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதே.
நல்லாட்சி அரசின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் உங்களிடம். கூறுவது எமது அரசு சுயாதீன நீதித்துறை ஒன்றை உருவாக்கியுள்ளது. யாராவது குற்றவாளிகளாக அடையாளம் காணப்படின் அவர்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை வழங்கும் .அனைத்துக்கும் ஒரு நடைமுறை உண்டு அதை பின்பற்றியே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் .இதற்கு சிறிது கால தாமதம் ஏற்படலாம்.ஆனால் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என தெரிவித்தார்.