இரண்டு சக்கரங்கள் உடைந்திருந்த நிலையிலும், பத்திரமாக தரையிறக்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி!

 

images

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தனான BA295 விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு புறப்பட்டு சென்றது. 

சுமார் இரண்டு மணிநேர பயணத்துக்கிடையே 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது தரையிறங்கும் போது செயல்படும் ‘லேண்டிங் கியர்’ன் ஐந்து செட் (அடுக்கு) சக்கரங்களில் இரண்டு செட் இயங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்ததை அறிந்த விமானி அதிர்ச்சியடந்தார்.

சிறிய தொழில்நுட்ப குறைபாடு காரணமாக நாம் மீண்டும் ஹீத்ரு விமான நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. சிரமத்துக்கு மன்னிக்கவும் என பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துவிட்டு, உடனடியாக ஹீத்ரோ விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, நிலைமையை எடுத்துகூறி, அவசரமாக அங்கு தரையிறங்க அனுமதி கேட்டார்.

பாதுகாப்பாகவும், மென்மையாகவும் ஒரு விமானம் தரையிறங்க வேண்டுமானால் ஐந்து சக்கரங்களின் டயர்களும் தேவையான அளவு காற்றுடன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தரையிறக்கம் கரடுமுரடானதாக (Rough landing) இருக்கும் என்பது கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கும் தெரியும் என்பதால், இந்த தகவலை கேட்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அந்த விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதர விமானங்கள் ஏறவோ, இறங்கவோ அனுமதி அளிக்கப்படாமல் இதர ஓடுபாதைகள் மூடப்பட்டன. ஒரேயொரு ஓடுபாதை மட்டும்  BA295 விமானத்தின் வரவை எதிர்நோக்கி தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் தயாராக காத்திருந்தது.

தாழ்வாக இறங்கி, சுமார் ஒன்பதாயிரம் அடி உயரத்தில் கடல்பகுதியில் பறக்கும்போது பெட்ரோலை எல்லாம் கடலில் கொட்டிவிட்டு, பயணிகளுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாத வகையில் நிலைமையை வெகு சாதுர்யமாக சமாளித்த விமானி, மூன்றே சக்கரங்களுடன் அந்த விமானத்தை பத்திரமாகவும், வெற்றிகரமாகவும் தரையிறக்கினார்.

ஓடுபாதையில் விமானம் ஓய்ந்து நின்றதும், ‘பேலன்ஸ் குலையாமல் இருக்க அனைத்து பயணிகளும் ஒரே பக்கமாக நடந்து செல்லுங்கள்’ என பணிப்பெண்கள் கூறியபோதுதான் பயணிகளில் பலருக்கு இரு சக்கரங்கள் செயலிழந்ததால்தான் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது என்ற தகவல் தெரியவந்தது.

தங்கள் உயிரை எல்லாம் காப்பாற்றிய அந்த விமானிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து மகிழ்ந்த சில பயணிகள், சராசரி ‘லேன்டிங்’கைவிட இந்த லேன்டிங் வெகு மென்மையாக இருந்ததாக குறிப்பிட்டனர். பின்னர், மாற்று விமானம் மூலம் அவர்கள் சிக்காகோ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.