ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
Mrs._Shiranthi_Rajapaksa
கடந்த ஆட்சிக் காலத்தில், ஊடக இணைப்பாளராக செயற்பட்ட ஒருவருக்கு குறைந்த மதிப்பீட்டில் வீடொன்றை வாங்கிக் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

குறித்த வீட்டை அவருக்கு வழங்குமாறு ஷிராந்தி ராஜபக்ஷ, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். 

இதேவேளை, அந்த வீடு, ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியானது என, காட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ள போதிலும், அதன் உண்மையான பெறுமதி 55 இலட்சம் ரூபா என, பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க ஷிராந்திக்கு கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அவர் அன்றையதினம் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.