சுன்னாகம் பிரதேசத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவின் காரணமாக நிலத்தடி நீர் பாவணைக்கு உகந்த வகையில் இல்லாமல் மாசடைந்தமை தொடர்பில் பல தடவைகள் பாராளுமன்றத்தில் கேள்விகள் தொடுக்கப்பட்டன. அதற்கான தெளிவான விரிவான பதில்களை தாம் வழங்கியிருப்பதாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (27) பிற்பகல் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சுன்னாக பிரதேசத்தில் நிலத்தடி நீர் மாசடைவு விவகாரம் துரதிஷ்டவசமாக, தேவையற்றமுறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். உண்மையில், சுன்னாகத்தை சூழயிருக்கின்ற 2 கிலோமீற்றர் பரப்பளவிலான பிரதேசத்தில் குறிப்பிட்டளவு கசிவு ஏற்பட்டிருக்கின்ற கிணறுகளிலிருந்து குடிநீர் பாவனைக்கு உகந்ததல்ல என்பதை நாங்கள் திட்டவட்டமாக அடையாளம் கண்டிருக்கின்றோம்.
ஆனால், அதனை மறுத்துரைத்து பல அறிக்கைகள் சில தரப்புக்களினால் வெளியிடப்பட்டிருந்தன. அவை அனைத்தையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், நாங்கள் ஈற்றிலே பாவனையாளர்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்ற அடிப்படையில்; அந்தந்த கிணறுகளை அடையாளப்படுத்தி பல கிணறுகளிலிருந்து நீர் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தினோம்.
பரிசோதனையின் பின்னர் அக்கிணறுகளை பாவணைக்குட்படுத்த வேண்டாமென மக்களை நாங்கள் அறிவுறுத்தியிருக்கின்றோம்.
அதன் பிரகாரம் எங்களுடைய செலவில் நீர்த்தாங்கிகள் (பவுஸர்) மூலம் நீரை விநியோகித்து வருகின்றோம். இதனால் எமது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் கூட அதை பொருட்படுத்தாது நாம் மக்களுக்காக இச் சேவையை வழங்குகின்றோம்.
இதற்கான நிரந்தரமான தீர்வை காண்பதையொட்டி ஏற்கனவே குறித்த பிரதேச வாழ் மக்களுக்கு இக் குடிநீர் தொடர்பில் அறிவுறுத்தல்களை விடுத்திருக்கின்றோம். அச்சப்பட வேண்டிய தேவையில்லை. இதற்கான மாற்று நடவடிக்கையாக கடல் நீரை சுத்திகரித்து வழங்கலாம் என்ற திட்டமொன்று ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக 25 மில்லியன் செலவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உவர் நீரை குடிநீராக மாற்றியமைக்கும் போது பாவனையாளர்களின் குடிநீருக்கான கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கின்றோம். குறிப்பாக ஏரிகளில் காணப்படும் நீரின் உவர் தன்மை குறைவாக இருப்பதனால் அணைகளைக் கட்டி அதனை சுத்திகரித்து குடிநீருக்கும் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
அதைவிட இலகுவானது இரணைமடு வாவிலிருந்து குடிநீரை கொண்டு செல்லும் திட்டம். ஆனால் இத்திட்டம் தொடர்பில் கிளிநொச்சி விவசாயிகள் மத்தியில் இனம்புரியாத பீதியை ஏற்படுத்திவிட்டார்கள். இப்பீதியை நிவர்த்தி செய்வதற்குரிய ஏற்பாடுகளையும் விவசாயிகளுடனான சந்திப்பொன்றையும் செய்யவுள்ளோம். அதன் முதன் கட்டமாக இரணைமடு வாவியை 2 அங்குலத்தால் உயர்த்துவதற்கான 18 மில்லியன் டொலர் செலவிலான செயற்திட்டமொன்றை முன்னொடுக்கவுள்ளோம்.
எனவே விவசாயிகள் அச்சப்பட வேண்டிய தேவையே இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன். இதற்காக தமிழ் அரசியல் தலைமைகளுக்கு வேண்டுகோளை முன்வைக்கின்றேன் அவர்களுடன் இணைந்தே இத்திட்டத்திற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இரு எதிர்வரும் காலங்களில் இத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
(ஊடக ஆலோசகர்)