இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மூலம் சம்பாதித்த 18 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பெயரில் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறிய மங்கள சமரவீர, அதனடிப்படையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் பெயரில் சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்ட சொத்துக்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சொத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்து அதனை மீளப்பெறுவதற்கு இலங்கை அரசு நான்கு நாடுகளின் உதவியை நாடியுள்ளதாகவும் சமரவீர கூறினார்.
இந்த சொத்துக்களை கண்டுபிடிப்பது மிகக்கடினமான ஒரு காரியமென்று கூறிய அமைச்சர் சமரவீர, லிபியத் தலைவர் கடாபி மரணமடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவர் பெயரில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 80 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்களில் இதுவரை 3.4 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை கண்டுபிடித்து அவற்றை மீளப்பெறுமாறு பொதுமக்கள் தற்போதைய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக கூறிய மங்கள சமரவீர, அதனை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயங்காது என்றும் கூறினார்.
மஹிந்த மறுப்பு
ஆனால் இவரது இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக அண்மையில் ஊடக அறிக்கையொன்றை விடுத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
தனக்கோ, தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ சொந்தமான சொத்துக்களோ இரகசிய வங்கிக்கணக்குகளோ வெளிநாடுகளில் இல்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன் மீதும் தனது குடும்ப உறுப்பினர்கள் மீதும் அவதூறு பரப்புவதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தற்போதைய அரசால் சுமத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.