ஊடகவியலாளர் எக்னெலிகொடவுக்கு புலிகளுடன் தொடர்பிருந்தமைக்கான சாட்சியங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் இதுவரை கண்டறியவில்லை என இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ஊடகவியலாளர் எக்னெலிகொடவை கண்டுபிடித்து தருமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்தியமை ஆகியவற்றை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த ஊடகவியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி எந்த பிரஜையும் தான் விரும்பிய நிலைப்பாட்டை கொண்டிருக்கவும் சிந்திக்கவும் மனசாட்சியின் படி செயற்படவும் சுதந்திரம் உள்ளது. அத்துடன் நாட்டில் எழுத்து, பேச்சு மற்றும் சுதந்திரமாக கருத்து கூறும் சுதந்திரமும் உள்ளன.
இவ்வாறான நிலையில், எக்னெலிகொட என்ற ஊடகவியலாளர் புலி எனக் கூறி, நீதிமன்றத்திற்குள் கலகொட அத்தே ஞானசார தேரர், சந்தியா எக்னெலிகொடவை திட்டி அச்சுறுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமான நிலைமை என்பதுடன் பிக்குத்துவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்துவதாகும்.
இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தால், செய்ய வேண்டியது சட்டத்தை கையில் எடுப்பதை அல்ல. வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு தாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும்.
நீதிமன்றத்தில் தும்மியவருக்கும், நீதிமன்றத்திற்குள் ஒருவரை அச்சுறுத்தியவருக்கும் சட்டம் பொதுவானதே.
நீதியை நிலைநாட்டும் இடத்தில் வைத்து ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவியை திட்டி அச்சுறுத்திய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும் எனவும் இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் கேட்டுள்ளது.