மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியே தீவிரவாதத்தை வெல்வதற்கான வழி: ஈரான் அதிபர்

Unknown
மத்திய கிழக்கு நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதே தீவிரவாதத்தை வெல்வதற்கான வழி என்று ஈரான் அதிபர் ஹாசன் ரோஹனி தெரிவித்துள்ளார். 

4 நாட்கள் பயணமாக அதிபர் ரோஹனி இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து மேற்கு உலக நாடுகள் உடனான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. 

இத்தாலி 18.4 பில்லியன் டாலர் அளவில் ஈரானுடன் கடந்த திங்கட்கிழமை வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் இருநாடுகளின் பொருளாதார கூட்டு வலுப்பெறும் வகையில் ஈரானுக்கு வருகை புரியுமாறு இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸிக்கு அதிபர் ரோஹினி நேற்று அழைப்பு விடுத்தார். 

இரண்டாம் நாள் பயணத்தின் போது இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் ரோஹனி உரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் முதலீடுகளை வரவேற்க தயாராக உள்ளோம், தொழில்நுட்பங்களையும் புதிய ஏற்றுமதி சந்தையையும் வரவேற்கின்றோம். தற்போதையை புதிய சூழலில் ஈரானில் உற்பத்தி செய்யப்படுவனவற்றில் 30 சதவீதத்தை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம்” என்றார். 

இதனை தொடர்ந்து, போப் பிரான்சிஸை சந்தித்து பேசிய ஈரான் அதிபர் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.