இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் 31-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் 2-வது டி20 போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது. தற்போது 2-வது போட்டி டெல்லியில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே, டெல்லி கிரிக்கெட் சங்கம் மீது முறைகேடு வழக்கு உள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியை நடத்த மட்டும் கோர்ட்டு இடைக்கால அனுமதி அளித்தது.
தற்போது டெல்லி கிரிக்கெட் சங்கம் டெல்லி அரசிடம் அனுமதி பெற்றால்தான் அங்கு போட்டி நடைபெறும் என பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அனுராக் தாகூர் கூறுகையில் ‘‘பி.சி.சி.ஐ. நாளை வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு காலக்கெடு கொடுத்துள்ளது. எங்களால் நீண்ட நாட்களுக்கு காத்திருக்க முடியாது. டெல்லியில் போட்டி நடைபெறாவிடில் கான்பூர், ராஞ்சி அல்லது ஐதராபாத்திற்கு போட்டி நடத்தப்படும். ஏற்கனவே, உலகக்கோப்பை டி20 போட்டியில் டெல்லிக்கு நான்கு போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய சூழ்நிலை உலகக்கோப்பைக்கு ஆபத்தாக இருக்காது. இதற்கும் உலகக்கோப்பைக்கு தொடர்பு இல்லை’’ என்றார்.
இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க பொருளாளர் ரவிந்தர் மான்சந்தா கூறுகையில் ‘‘இன்று விடுமுறை. எங்களுடைய சூழ்நிலை குறித்து நாளை பி.சி.சி.ஐ.-க்கு தெரிவிப்போம்’’ என்றார். மேலும், இரண்டு நாட்களில் மாநில அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்