நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்ற கேள்விக்கே இடம் இல்லை என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியில், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை சமீபத்தில் மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர். நாட்டில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் அவர்கள் குறை கூறினார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அத்வானி நேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் நஜ்மா ஹெப்துல்லா, ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அத்வானி நிருபர்களிடம் பேசுகையில், “நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது? அப்படிப்பட்ட கேள்விக்கே இப்போது இடம் இல்லை. நம் நாட்டில் பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் உள்ளது” என்றார். நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் தேசபக்தியை வளர்க்கவேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.
முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போதும், பின்னர் நெருக்கடி நிலையின் போதும் கருத்து சுதந்திரத்தை நசுக்க மேற்கொண்ட முயற்சிகளை எதிர்த்து மக்கள் போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாரதீய ஜனதா தலைமையின் மீது அத்வானி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அக்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்ட அமித்ஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்வானியை சந்தித்து பேசினார். அத்வானியிடம் ஆசி பெறுவதற்காக அவரை அமித்ஷா சந்தித்ததாக பாரதீய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு பற்றி நேற்று அத்வானியிடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது, அவர் எதுவும் கூற மறுத்துவிட்டார்.