இந்தியாவின் 67 ஆவது குடியரசு தினவிழா தலைநகர் டெல்லியில் கோலாகலமாக இன்று நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கிடையே நடைபெறும் இந்தக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் பங்கேறுள்ளார்.
குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக, டெல்லி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்தது இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் இதன் போது நடைபெற்றன.
குடியரசு நாடாக இந்தியா அறிவிக்கப்பட்ட கடந்த 67 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு வெளிநாட்டு இராணுவம் இந்த குடியரசு தின விழாவில்தான் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று நடக்கும் விழாவில் ப்ரெஞ்ச் இராணுவத்தின் ஒரு பகுதி பங்கேற்கிறது.
26 ஆண்டுகளுக்குப் பிறகு இராணுவ நாய்களின் அணிவகுப்பு இடம்பெறுகிறது. லாப்ரடார் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த 36 நாய்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்திய குடியரசு தினவிழா 115 நிமிடங்கள் நடைபெறும். இந்த ஆண்டு அந்த கால அளவு 90 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 25 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த குடியரசு தின விழாவின் முதல் முறையாக சி.ஆர்.பி.எப்.பின் பெண் வீராங்கனைகள் பல்வேறு சாகசக் காட்சிகளை அரங்கேற்றியுள்ளனர். இதற்காக 126 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவர் மனைவி மிஷேல் பங்கேற்றனர். அப்போது திடீரென மழை பெய்ய ஆரம்பிக்க, ஒபாமா தம்பதிகள் தங்களுக்குத் தாங்களே குடைப் பிடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்த முறை அந்த சங்கடத்தைத் தவிர்க்க குடைகளுடன் இராணுவ வீரர்கள் குழு தயார் நிலையில் இருந்தமை மற்றுமொரு விசேட அம்சமாகும்.