எஸ்.எம்.அறூஸ்
விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தை முன்னிட்டு இன்று(25) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உடற் பயிற்சி ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜூதீன் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றஸீன் ஆகியோர் கலந்து கொண்டு உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு உடற்பயிற்சிகளை வழங்கினர்.
ஜனாதிபதி செயலகத்தினதும், விளையாட்டுத்துறை அமைச்சினதும் வழிகாட்டலில் இன்று 25ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் விசேட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளும் உடல் ஆரோக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இங்கு பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா உரையாற்றும்போது,
தேகாரோக்கியமுள்ள ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே ஆரோக்கியமான எதிர்காலத்தை அடைய முடியும். இதற்காக விளையாட்டு மற்றும் சரீர ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியமாகும். இன்று மனித உழைப்பில் அதிகமான பணம் சுகாதாரத்திற்காக செலவீடு செய்யப்படுகின்ற அதேவேளை அரசாங்கமும் நாட்டின் சுகாதாரத்துறையை விருத்தி செய்து அதிக பணத்தினை செலவு செய்கின்றது.
இன்று தொற்றா நோய்களே எம்மில் பலரை ஆட்படுத்திக் கொள்கின்றன. இதனாலேயே அதிகமான மரணங்களும் இடம்பெறுகின்றன. இதற்கு போதிய உடற்பயிற்சியின்மை, உணவுப் பழக்க வழக்கம் என்பனவே ஆகும் என்றார்.