இராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தம் !

Unknown
இராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க பொது செயலாளர் போஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 

* இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 68 படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

* மீன்பிடிக்க உரிமையுள்ள கச்சத்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து பிடித்து செல்லும் படகுகளை விடுவிக்காமல் உள்ளனர். இலங்கையில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்காவிட்டால் இந்திய-இலங்கை அரசால் வருகிற பெப்ரவரி மாதம் 20-ம் திகதி நடத்தப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் மீனவர்கள் கலந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது. 

* இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், மீனவர்களை விடுவிப்பதற்கு ரூ.5 இலட்சம் அபராதமும் என்று அறிவித்து மீனவர்களின் படகுகள் அரசு உடைமையாக்கப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை மீனவர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

* இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 18 படகுகளுக்கும் இதுவரை அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படவில்லை. 18 படகுகளின் உரிமையாளர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 

* இலங்கையில் உள்ள 68 படகுகள் மற்றும் 7 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை (26-ம் திகதி) நாகப்பட்டினத்தில் மீனவர்கள் சார்பாக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இராமேசுவரம் மீனவர்கள் கலந்து கொள்வது, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (25-ம் திகதி) முதல் இராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது. 

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.