தோட்டப் பகுதி தொழிலாளர்கள் சிறுநீரகங்களை வெளியாட்களுக்கு விற்பனை செய்கின்றனர்: வேலுசாமி இராதாகிருஷ்ணன்

இலங்கையில் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகின்ற சிறுநீரக விற்பனை விடயத்தில் மலையக தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே அதிகமான சிறுநீரகங்களை விற்பனை செய்கின்றார்கள் என சுகாதார அமைச்சு அறிக்கை விடுத்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

ratha krisnan

டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் நடைபெற்ற 25 வீடுகளை கொண்ட புதிய கிராமத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் மறைந்த பெ.சந்திரசேகரனின் தனிவீட்டு கொள்ளை வழிநடத்தலின் பேரில் சனிக்கிழமை (23.01.2016) இடம்பெற்ற இவ் வைபவத்தில் அவர் மேலும் உரை நிகழ்த்தியவதாவது, 

சென்ற வருடம் ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி மாற்றத்திற்கான புரட்சியில் மலையக மக்கள் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணி மற்றும் தனி வீட்டு திட்டத்திற்கு சம்மந்தம் தெரிவிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் இன்று நல்லாட்சி அரசாங்கம் தனி வீட்டு திட்டத்தை படிப்படியாக செயற்படுத்தி வருகின்றது. 2016ம் ஆண்டில் இரண்டு புதிய கிராமங்கள் அமைக்கும் திட்டம் கூட்டணியினால் செயற்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி அக்கரப்பத்தனை பங்கட்டன் தோட்டத்திலும் 31ம் திகதி பொகவந்தலாவையில் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்படவுள்ளது. 

அதேவேளை ஒவ்வொரு தோட்டத்திலும் 25 தொடக்கம் 30 வீடுகள் அமைவாக இவ்வருடத்தில் 1270 வீடுகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இந்தியா அரசாங்கத்தின் 4000 வீடுகள் அமைக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

வறுமையை எதிர்நோக்கும் தொழிலாளர்கள் தங்களின் சிறுநீரகங்களை வெளியாட்களுக்கு விற்பனை செய்து வருகின்றார்களாம் என அண்மையில் சுகாதார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தோட்ட பகுதியை சேர்ந்தவர்களே அதிகமான சிறுநீரகங்களை சில தரகர்கள் ஊடாக விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வறுமை இருக்க தான் செய்யும் அதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்து எதிர்கால வாழ்க்கையை பாலாக்கி கொள்ள வேண்டாம். அதுவும் தரகர்கள் ஊடாக சிறுநீரகங்கள் விற்பனை செய்யும் செயற்பாடுகள் மலையகத்தில் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு தோட்டப்பகுதிகளில் இவ்வாறான தரகர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என தனது உரையில் மேலும் தெரிவித்தார்.