புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கியமான பேச்சுவார்த்தைகள் அடுத்தவார இறுதியில் இடம்பெறவுள்ளன.
இதன்போது இருதரப்பிற்கிடையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டு, இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தானும், கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் கல்முனை மேயருமான நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்ளும் பங்கேற்பர்கள் என அவர் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அதியுயர் அதிகார பகிர்வு, வடகிழக்கு இணைப்பு போன்ற விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும், வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களினதும் அபிலாஷைகள் குறித்து கருத்திற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக அலகு ரீதியான விடயத்தினை தாம் இறுதியாகவே ஆராயவுள்ளதாக ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது சில இனவாத சக்திகள் தமிழ். முஸ்லிம் தரப்புக்களின் சந்திப்புக்களை பயன்படுத்தி இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான சக்திகளுக்கு கூட்டமைப்பினதும், முஸ்லிம் காங்கிரஸினதும் சந்திப்புக்களும், பேச்சுவார்த்தையில் எடுக்கும் தீர்மானங்களும் தீனியாக அமைந்து விடக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையிலேயே தமது பேச்சுவார்த்தைக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.