நேதாஜியின் மர்ம மறைவு தொடர்பாக மத்திய அரசின் காப்பகத்தில் இருந்த நூறு ரகசிய கோப்புகளை நேதாஜியின் பிறந்தநாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, நாட்டின் விடுதலைக்காக மிகப்பெரிய படையை உருவாக்கி உலக புகழ்பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1948–ம் ஆண்டு அவர் விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே அவர் விமான விபத்துக்கு பிறகு உயிருடன் இருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவரது மரணம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியானது. அவர் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியானதால் சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய உண்மை தகவல் என்ன? என்பதில் மர்மம் நீடிக்கிறது.
அடிக்கடி அவரைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வரிசையில் கடந்த சில தினங்களாக இங்கிலாந்து இணைய தளம், சுபாஷ் சந்திரபோசின் மரணம் நிகழ்ந்த தேதி, மற்றும் அவர் உடல் எரியூட்டப்பட்டு இறுதிச் சடங்கு நடந்த தேதி போன்ற விபரங்களை உரிய ஆவணங்களுடன் வெளியிட்டது.
தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மகள் அனிதா போஸ், அந்த இணைய தள ஆவணங்களை பார்வையிட்டு, அவை நம்பும்படி இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேதாஜியின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து ஆவணங்களையும் வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, நேதாஜியின் பிறந்த நாளான இன்று (சனிக்கிழமை) அவர் மரணம் தொடர்பான 100 கோப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
கோப்புகளை வெளியிட்ட பின்னர் இதர மத்திய மந்திரிகளுடன் சுமார் அரைமணி நேரம் அவற்றில் உள்ள குறிப்புகளை படித்துப்பார்த்த பிரதமர் மோடி நேதாஜியின் குடும்பத்தாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
ஏற்கனவே, நேதாஜி மரணம் தொடர்பாக 64 முக்கிய ஆவணங்களை மம்தா பாணர்ஜி தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.