ஐக்கிய தேசியக் கட்சியினால் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைகளுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களை நீக்கிவிட்டு, தகுதியானவர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும் என்று எமது கடந்த வார கட்டுரை வலிறுத்தியிருந்தது. அவ்வாறு செய்யாவிட்டால், ஆறப்போட்டு ஆற்ற நினைத்த காயம், சீழ்பிடித்து நாற்றமெடுக்கத் தொடங்கிவிடும் என்று அக்கட்டுரை முடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே மு.கா. தலைவரின் சகோதரர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் தனது எம்.பி. பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். சீழ்பிடித்து நாற்றமெடுப்பதற்கு முன்னதாகவே எச்சரிக்கையுடன் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்க வேண்டும். தற்காலிகமாக தனக்கு வழங்கப்பட்ட பதவியை சில வருடங்களுக்கு முன் சுஹைரும் ஹூசைன் பைலாவும் எடுத்துக் கொண்டு ஓடியது போல செய்யாமல், பல மாதங்கள் கடந்தாவது அதனை இராஜினாமா செய்த டாக்டர் ஹபீஸின் நேர்மை மெச்சப்படத்தக்கது.
தற்காலிக நடவடிக்கை
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டமையால் மு.கா.வுக்கு தேசியப்பட்டியலில் இரண்டு இடங்கள் வெகுமானமாக வழங்கப்பட்டன. உத்தேச தேசியப்பட்டியலுக்கு ஐ.தே.க.ஊடாக 5 பேரின் பெயர்களை மு.கா. முன்னமே பிரேரித்திருந்தாலும், தேசியப்பட்டியல் எம்.பி.க்கு கடுமையான போட்டி நிலவியது. மு.கா. தலைவர் ஹக்கீம் கட்சியிலுள்ளவர்களுக்கு மட்டுமன்றி ஊர் வாரியாகவும் எம்.பி. ஆசையை வளர்த்து விட்டிருந்ததால் நிலைமை மிக மோசமாக இருந்தது. எனவே தமக்கு ‘நம்பிக்கையானவர்கள்’ என்ற தோரணையில் தனது சகோதரர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் மற்றும் தனது நெருங்கிய சகாவான சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் ஆகியோருக்கு தற்காலிக அடிப்படையில் தேசியப்பட்டியல் எம்.பி. பதவிகளை ஹக்கீம் வழங்கியிருந்தார்.
தேசியப்பட்டியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை தற்காலிகமாக அல்லது சில நாட்களுக்கு என்ற அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டிருந்தாலும், கிட்டத்தட்ட 5 மாதங்களாக ஹக்கீம் ஒரு தீர்;க்கமான முடிவை எடுத்து, நிரந்தரமாக வேறு யாரையும் எம்.பி.க்களாக நியமிக்கவில்லை. கட்சிக்குள் இருப்பவர்களே இதற்கு அழுத்தம் கொடு;த்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறானவர்கள் கட்சியில் அரை அமைச்சர்களாக, எம்.பி.க்களாக, மாகாண சபை அமைச்சர்களாக, மாகாண சபை உறுப்பினர்களாக மற்றும் கட்சியில் பெயரளவிலான பதவிகளை வகிப்பவர்களாக, இணைப்பதிகாரிகளாக இருந்தமையால் ஹக்கீமை தட்டிக் கேட்கத் திராணியற்று இருந்தனர். மக்களும் இதை மறந்து விட்டனர். இவ்விடயமாக கட்சித் தலைவருடன் பேசியவர்கள் ஓரிருவர் மட்டுமே என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை ‘டாக்டர் ஹபீஸூம் கட்சிக்காக பாடுபட்டவர்தானே’ என்ற அடிப்படையில் அவர் இன்னும் கொஞ்ச காலத்திற்கு எம்.பி.யாக இருக்கட்டும் என்று யாராவது விரும்பியிருக்கலாம் ஆயினும், 5 மாதங்கள் கடந்தும் இதை இப்படியே இழுத்துக் கொண்டு போக முடியாது என்பதை தலைவர் விளங்கிக் கொண்டர். இன்னுமொரு தேர்தல் வருகின்றது. பாலமுனையில் மாநாட்டை நடாத்தும் உத்தேசம் இருக்கின்றது. எனவே கிழக்கிற்கு போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அப்படிச் சென்றால், அங்குள்ள மக்கள் இதைக் கேட்டுக் கேட்டே தலைகுனிய வைத்து விடுவார்கள் என்று ஹக்கீம் நினைத்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, கடைசியாக இடம்பெற்ற விகிதாசார முறைமையிலான தேர்தலில் தனது சகோதரனுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை வாங்கிக் கொடுத்த திருப்தியோடு, அப்பதவியை இன்னுமொருவருக்கு விட்டுக் கொடுக்க தலைவர் முடிவெடுத்திருக்கவும் கூடும்.
ஆனால் இதில் இரண்டு பிரச்சினைகளை தலைமை எதிர் கொண்டிருக்கின்றது எனலாம். முதலாவது பிரச்சினை இவர்கள் இருவரையும் அல்லது அதில் ஒருவரை இராஜினாமா செய்ய வைத்து அப் பதவியை வெற்றிடமாக்கினால் மீண்டும் பழையபடி தேசியப்பட்டியலுக்கு ஆளுக்காள் போட்டி போடுவார்கள். யாருக்கு கொடுப்பது என்ற தர்மசங்கட நிலை உருவாகும் என்பதாகும். இரண்டாவது பிரச்சினை என்னவென்றால், தற்காலிகமாக சல்மானையும் ஹபீஸையும் தேசியப் பட்டியல் ஊடாக முஸ்லிம் காங்கிரஸ் நியமித்ததை ஐக்கிய தேசிய கட்சி பெரிதாக விரும்பவில்லை. அவர்கள் வேறு இருவரே நியமிக்கப்பட வேண்டுமென எதிர்பார்த்திருந்தார்கள். இந்நிலையில், இப்பதவியை இராஜினமாச் செய்துவிட்டு அதற்கு பதிலாக யாரையேனும் நியமிப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் ஐ.தே.க. விரும்பினால் வேறு யாரையும் நியமித்துவிட முடியும். எனவே அவ்வாறு ஏதாவது நடந்து விடுமோ என்ற அச்சமே அப் பிரச்சினையாகும்.
எனவே இது விடயமாக மு.கா. தலைவர் ஹக்கீம் ஐ.தே.கட்சியுன் ரகசிய பேச்சுக்களை நடத்தி இணக்கம் கண்ட பின்னரே ஹபீஸை இராஜினாமா செய்ய வைக்கும் முயற்சியில் இறங்கியதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால், சில ‘கோயாபல்ஸ்கள்’ சொல்வது போல் நீண்ட நாட்களுக்கு முன்னரே ஹபீஸ் இராஜினமா செய்து விட்டார் என்பதில் எவ்வித உண்மையும் இல்லை. ஜனவரி மாத ஆரம்பத்திலிருந்து தலைவர் இவ்விடயத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்தியிருக்கின்றார். இம் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய வேளையிலும் அதற்கு பின்னர் சபை கூடியபோதும் இராஜினாமா செய்வதற்கு முனைப்புக் காட்டிபோதும், இராஜினாமா செய்யாமல் உப்புச்சப்பற்ற காரணங்கள் கூறப்பட்டன. இவ்வாறிருக்கையில், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னரே இராஜினமா கடிதத்தில் ஹபீஸிடம் இருந்து தலைவர் ஒப்பத்தை பெற்றுக் கொண்டதாக மு.கா. அதியுயர்பீட நம்பகமான உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தலைவர் மீண்டும் பிஸி
தேசியப்பட்டியலை ஹபீஸ் இராஜினாமா செய்வதாக அறிவித்ததும் மீண்டும் தலைவரை நோக்கிய படையெடுப்பு ஆரம்பமானது, தலைவர் ஹக்கீமின் வீடு நிரம்பியது, அவர் பிஸியாகியுள்ளார். இது எதிர்பார்த்ததுதான். இருப்பினும் யாருக்கு இந்த முதலாவது தேசியப்பட்டியலை கொடுப்பது என்ற முடிவை தலைவர் ஓரளவுக்கு எடுத்த பின்னரே இராஜினாமாச் செய்யும் கடிதம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்ல முடியும். ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருப்பதால் அவர் நாடு திரும்பியதும் ஐ.தே.கட்சிக்கு நியமன உறுப்பினரின் பெயரை மு.கா. உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தன்னை வந்து மொய்த்து, ஒரு நெருக்கடி கொடுப்பதை தணிப்பதற்காக, ஹபீஸ் இராஜினாமா செய்ததை இரகசியமாக வைத்திருக்க கட்சித் தலைவர் ஹக்கீம் விரும்பியிருந்தார். ஆனால் கிழக்கு மாகாண முதலiமைச்சரான நஸீர் அகமட்டே இச் செய்தியை முதன்முதலாக கசிய விட்டுள்ளார். இதனால், ஹக்கீம் எதிர்பார்த்ததை விட கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். இதற்கிடையில், யாருக்கு இத் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி வழங்கப்படும் என்ற அனுமானங்களும், யார் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களும் முஸ்லிம் அரசியல் களத்தில் தற்போது பரவலாக முன்வைக்கப்படுகின்றன.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹபீஸ் தனது பதவியை இராஜினாமா செய்த செய்தி வந்த சில நிமிடங்களில், அவ்விடத்திற்கு தற்போது கிழக்கு முதலமைச்சராக இருக்கும் நஸீர் அகமட் நியமிக்கப்படவுள்ளதாக ஊக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இதில் எவ்வித உண்மையும் இல்லை என்று பின்னர் தெரியவந்தது. இத்தகவல் பெயர் குழறுபடியின் காரணமாக தவறுதலாக வெளியாகிவிட்டது என்று ஒரு விளக்கம் முன்வைக்கப்படுகின்றது. ஆயினும் நஸீர் அகமட் வேண்டுமென்றே இவ்வாறான புரளி ஒன்றை ஏற்படுத்தி விட்டிருக்கின்றாரோ என்ற சந்தேகம் கட்சிக்குள் வலுவடைந்திருப்பதால், தலைவர் ஹக்கீம் முதலமைச்சரில் கொஞ்சம் கடுப்படைந்துள்ளாக அறிய முடிகின்றது.
முதலமைச்சரை தேசியப்பட்டியல் எம்.பி.யாக நியமித்துவிட்டு அவரது இடத்திற்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரை நியமிக்க கட்சித் தலைமை வியூகம் வகுத்திருப்பதாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படாது. அவ்வாறு நியமிக்க மக்களும் கட்சி உறுப்பினர்களும் விடமாட்டார்கள். ஏற்கனவே அவருக்கு முதலமைச்சை வழங்கியதே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது இத்தனைபேர் எம்.பி. கேட்டு சண்டை பிடித்துக் கொண்டிருக்க இது விடயத்திலும் முதலமைச்சருக்கு முன்னுரிமை வழங்க முடியாது. அதுமட்டுமன்றி, அவர் தற்போது கிழக்கில் முன்னெடுத்துவரும் செயற்றிட்டங்களும் அதனால் ஸ்தம்பிதமடைந்து விடும் அபாயமிருக்கின்றது.
இதில் இன்னுமொரு சிக்கலும் இருக்கின்றது. அதாவது – மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துக் கொண்டிருந்த மு.கா.தவிசாளர் பசீர் சேகுதாவூத்திற்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்காமலேயே அலிசாகிர் மௌலானாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஒரு ஊரில் இரண்டு பேரை நிறுத்த முடியாது என்ற அடிப்படையிலேயே இத் தீர்மானத்தை ஹக்கீம் எடுத்திருந்தார். இப்போது, அவ்வூரைச் சேர்ந்த நஸீரை எம்.பி.யாக நியமித்தால் மு.கா. தலைவர் தனது விதியை தானே மீறியவர் ஆவார். இது கட்சிக்குள் பெரும் சிக்கலை தோற்றுவிப்பது ஒருபுறமிருக்க, தலைவரின் இரகசியங்களை பேணிப் பாதுகாத்து வைத்திருக்கும் பஷீருக்கும் பெரும் ஆத்திரத்தை உண்டு பண்ணும். இது என்ன உருவம் எடுக்கும் என்றும் சொல்ல இயலாது.
எனவே, இப்போதிருக்கின்ற நிலையில் நிலையில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக்கிற்கு முதலாவது தேசியப்பட்டியல் எம்.பி. கிடைக்கும் சாத்தியமிருக்கின்றது. முஸ்;லிம் காங்கிரஸைப் பொறுத்தமட்டில் வன்னி மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயே இப்போது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்து நிற்கின்றது. எனவே இன்னுமொரு தேர்தலை எதிர்நோக்கிள்ள நிலையில் கட்சியை கட்டி எழுப்பும் தேவையும் இருக்கின்றது. இந்த அடிப்படையில் தௌபீக்கிற்கு முன்னுரிமை அளிப்பதற்கான முடிவை தலைவர் ஹக்கீம் எடுப்பார் என்றால் அதை யாரும் பெரிதாக மறுதலிக்கமாட்டார்கள். ஆனாலும் இது தொடர்பாக தனக்கு எவ்வித வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என்று முன்னாள் பிரதியமைச்சர் தௌபீக் சொன்னார்.
பரிசீலனை பட்டியல்
இவர் தவிர இன்னும் பலரும் தேசியப் பட்டியல் எம்.பி. நியமனத்தில் பரிசீலனைக்கு உரியவர்களாக உள்ளனர். இந்தப் பட்டியல் நீளமானது என்றாலும், சிலர் இதில் முக்கியமானவர்களாக தெரிகின்றனர். குறிப்பாக – எம்.ரி.ஹசனலி, பசீர் சேகுதாவூத், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் பெயர்கள் அதிகமதிகம் பேசப்படுகின்றன. இதில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அடிப்படையில் கட்சிக்கு முக்கியமானவர்கள். பசீர் சேகுதாவூத்தை எடுத்துக் கொண்டால் தலைவருக்கு தெரியாமல் முழு அமைச்சு எடுத்தது, அறிக்கை விட்டது போன்ற பல வேலைகளைச் செய்தாலும் கட்சியின் தவிசாளர் என்ற வகையில் கட்சிக்காக உழைத்திருக்கின்றார். ஆனால், மேலே குறிப்பிட்டது போன்று கடந்த தேர்தலில் திட்டமிட்டு அவருக்கான போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவரை திருப்திப்படுத்த வேண்டியுள்ளது.
அடுத்த ஆளுமை எம்.ரி. ஹசனலி. முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக இருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டவர். அஷ்ரஃபின் கொள்கையில் உறுதியாக இருப்பதாலும் ஹக்கீமின் மூக்கணாங்கயிறை இழுத்துப் பிடிப்பதாலுமே அவர் கட்சியில் இருந்து கட்டம் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளார். அவர் மற்றும் அவர் போன்றவர்களை ஒதுக்குதல் என்பது முதலாளித்துவ அரசியலின் நிகழ்ச்சித்திட்டம.; தேசியப்பட்டியல் என்பது இங்கு கடைசியாகக் கிடைத்த கருவி மட்டுமே. தலைமைக்கு எதிராக பேசும் யாருக்கும் இதுதான் நிலைமை என்பதற்கு கடைசி உதாரணம் இவர். அவரை போட்டியிட வேண்டாமென்றும் ‘உங்களுக்கு தேசியப்பட்டியல் தருகின்றேன்’ என்றும் தலைவர் வாக்குறுதியளித்ததாக ஹசனலி கூறியுள்ளார்;. கட்சியில் முக்கியமானவர் என்ற அடிப்படையிலும் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி நன்றாக அறிந்து, ஆவணங்களை கையில் வைத்திருப்பவர் என்பதற்காகவும் அவருக்கும் எம்.பி. கொடுக்க வேண்டிய நிலையில் தலைமை இருக்கின்றது. அவருக்கு எம்.பி. கொடுப்பதோ கொடுக்காமல் விடுவதோ மக்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால், அவரை கட்சியில் இருந்து ஓரம்கட்டுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அடுத்தவர் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் அப்துர் ரஹ்மான். இம்முன்னணிக்கு மக்களிடையே நல்லதொரு பெயர் இருந்தது. ஆனால் மு.கா.வுடன் கூட்டுச் சேர்ந்து, நேரடி அரசியல் என்ற குட்டைக்குள் விழுந்து விட்டதால் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியும் சாதாரண ஒரு அரசியல் கட்சியைப் போலவே நோக்கப்படுதல் தவிர்க்க முடியாததாகி விட்டது. எவ்வாறிருப்பினும், இரு தரப்புக்கும் இடையில் தேர்தல் காலத்தில் ஏற்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாகவும் அவரால் ஏற்கனவே செலவளிக்கப்பட்ட தொகைக்கு பகரமாகவும் ஏதோ ஒரு அடிப்படையில் ரஹ்மானை திருப்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் மு.கா.வுக்கு உள்ளது. கட்சி என்ற அடிப்படையில் ‘இவர்கள் எல்லாம’; இடையில் வந்தவர்கள்தானே என்று மூத்த உறுப்பினர்கள் கருதினாலும் ஹக்கீம், ரஹ்மானை நோக்கும் கோணம் வேறாக இருக்கக் கூடும்.
இவர்கள் தவிர வேறு சிலரது பெயரும் தேசியப்பட்டியல் விடயத்தில் பேசப்பட்டு, பேச்சடங்கிப் போயிருக்கின்றது. இதில் முக்கியமானவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர். அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் என்ற ஆர்ப்பரிப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவரது பெயரும் பரிசீலனையில் இருந்தது. ஆனால், அட்டாளைச்சேனைக்கு வேறொரு வெகுமானம் வழங்கப்பட்ட பிற்பாடு பேச்சையே காணவில்லை. ஒரு சட்டத்தரணி என்ற வகையிலன்றி, நேரடி அரசியல் களத்தில் மக்களுக்கு பரிச்சயமற்று இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்கு முக்கியமானவர். அக்கட்சியில் முதலாவது உறுப்பினர் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப். இரண்டாம் இலக்க உறுப்பினர் கபூர் ஆவார். கட்சியை பதிவு செய்தது முதற்கொண்டு தலைவருடன் சேர்ந்த பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளார். பல தடவை அவரது பெயர் தேசியப்பட்டியலில் போடப்பட்டிருந்தாலும், அவர் பாராளுமன்ற ஆசனத்தில் அமரவில்லை. இந்நிலையில் கட்சிக்கு தான் என்ன செய்தேன் என்பதற்கான 155 பக்க ஆதாரத்துடன் அவர் அனுப்பிய எம்.பி.க்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகின்றதா என்பது கூட நிச்சயமில்லை.
இவ்வாறு பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பலர் தேசியப் பட்டியல் விடயத்தில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவர்களாக உள்ளனர். ஆனால், எல்லோரது பெயரையும் இங்கு குறிப்பிட முடியாது என்ற யதார்த்தத்தை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் சிலரை நியமிப்பதில் சட்டச் சிக்கலும் உள்ளது. இவ்வாறான நிலையிலும் தலைவர் ஹக்கீம் சிலருக்கு தற்போதும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கூறி வருவதாக அறியக் கிடைக்கின்றது. இது பற்றி தலைவர் சொன்ன கருத்துக்கள், வசனங்கள் எல்லாம் எமக்கு கிடைத்துள்ளன என்றாலும், அவற்றை எழுதுவதை தவிர்க்க விரும்புகின்றேன்.
சல்மான் எப்போது?
தமக்கு தேசியப்பட்டியல் கிடைக்க வேண்டுமென தவமிருக்கும் அநேகமானவர்கள் தமக்கு நெருக்கமானவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கதைகளை கூறி வருகின்றனர். அதற்கு தலைவரும் ஒரு வகையில் காரணம் என்றே சொல்ல வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக, முடிவு எடுக்கப்படும் கடைசி நொடி வரைக்கும் எல்லோரையும் திருப்திப்படுத்துவதற்கு தலைவர் செய்கின்ற பசப்பு அரசியலினாலேயே பெரும்பாலும் இது நேர்கின்றது. இதனைக் கருத்திற் கொண்டால் இம்முறை தேசியப்பட்டியல் நியமனத்தின் பின்னரான கட்சித் தாவல்களை தடுக்கலாம்.
எல்லோரும் கட்சிக்கு ஏதாவது பங்களிப்பை செய்திருக்கலாம். ஆனால், எல்லோரையும் ஒரேநேரத்தில் திருப்திப்படுத்த முடியாது. இம்முறை சுழற்சி அடிப்படையில் வழங்கினாலும் 4 பேரையே சமாளிக்கலாம். அவ்வாறு நான்கு பெயரைக்கு வழங்குவது என்றால் கூட மற்றுமொரு எம்.பி.யான சல்மான் இராஜினாமாச் செய்ய வேண்டும். ஆனால் அவர் இன்னும் அதைச் செய்யவில்லை. டாக்டர் ஹபீஸ் தனது அமானிதத்தை ஒப்படைத்து விட்டார் என்றும் அவர் உத்தமன் என்றும் சொல்வது உண்மை என்றால், அவரோடு எம்;.பி.யாக நியமிக்கப்பட்டு இன்னும் அப்பதவியை துறக்காதிருக்கின்ற சல்மானுக்கு, கட்சி ஆதரவாளர்கள் உத்தமனின் எதிர்ச்சொல்லை வைத்தே அழைக்க வேண்டியிருக்கும். இங்கே, எம்;.பி.பதவிக்காக பெரிய பிரளயமே நடைபெற்றுக் கொண்டிருக்க சல்மானை இன்னும் அப்பதவியில் தலைவர் ஏன் வைத்துக் கொண்டிருக்கின்றார் என்ற கேள்வி பலருக்கு எழலாம்.
உண்மையில், இரண்டு எம்.பி. பதவிகளையும் ஒரே தடவையில் வெற்றிடமாக்கினால், அதற்கு யார் யாரை நியமிப்பது என்பதில் பாரிய சிக்கல்களை தலைவரும் கட்சியும் எதிர்கொள்ளும். இரண்டு கட்டமாக இதைச் செய்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். முதலாவது தடவை யாருக்காவது கொடுக்கலாம். அப்போது மற்றவர்கள் கேட்டால் ‘அடுத்த முறை தருகின்றேன்’ என்று சொல்லி சமாளிக்கலாம் என்ற எண்ணத்திலேயே ஹக்கீம், சல்மானை இராஜினாமா செய்ய வலியுறுத்தாமல் விட்டிருக்க வேண்டும். அதாவது, அந்த சிக்கலை ஹக்கீம் தள்ளிப் போட்டுள்ளார். ஆனால், முதலாவது எம்.பி.யை விட இரண்டாவது எம்.பி. நியமனம் இதைவிட கடுமையான சிக்கலை கொண்டதாக இருக்கும் என்பதை அவர் மறந்து விட்டாரோ தெரியாது.
அவ்வாறு, தேசியப் பட்டியல் எம்;.பி. நியமனத்தில் மேலும் சிக்கல் நீடிக்குமாயின் அச் சிக்கல் தீரும் வரைக்கும் மிக சூசகமான முறையில் சல்மானையே தொடர்ந்தும் எம்.பி.யாக இருக்கச் செய்வார் ஹக்கீம். எனவே, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சல்மானிடம் இருந்து எம்.பி. பதவியை விடுவித்து, வேறு பொருத்தமானவரை நியமிக்க வேண்டுமாயின் தமக்கிடையே நடைபெறும் தேசியப்பட்டியல் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தமக்குள் பேசி, பொருத்தமானவர்களின் பெயர்களை தலைவருக்கு புரியும் மொழியில் முன்வைக்க வேண்டும். தனது சொந்த சகோதரனை இராஜினாமாச் செய்ய வைத்ததன் மூலம், மக்களிடையே இருந்த நல்லெண்ணத்தை கொஞ்சம் அதிகரித்துள்ள தலைவர் ஹக்கீம், சல்மானையும் பதவி விலக்கி பொருத்தமான ஆளுமையை நியமிப்பதன் மூலம் அந்த எண்ணப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் நியமன விடயத்தில், காயங்கள் ஒன்றல்ல, இரண்டு! ஒன்றுக்கு மருந்து கட்டினால் மட்டும் நாற்றத்தை தடுத்துவிட முடியாது.
• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 23.01.2016)