முஸ்லிம்களின் நலன்களை உள்வாங்காத தீர்வு முயற்சிகள் ஒருபோதும் நீடித்த சமாதானத்தை தராது: அமைச்சர் றிசாத்

 

7M8A5224_Fotor

 

முஸ்லிம் சமூகத்தின் நலன்களை உள்வாங்காத எந்த ஒரு தீர்வும் நீடித்த சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்தாது  எனவும் இன நெருக்கடியைத் தீர்க்க பாடுபடும் தென்னாபிரிக்கா இதனை கவனத்திற்கொள்வது அவசியமானது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று காலை தெரிவித்தார். தென்னாபிரிக்கத் தூதுவர் ஜெப்ரி டொயிட்கேவை தனது அமைச்சில் சந்தித்து அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கையின் அரசியல் நிலவரங்கள், தென்னாபிரிக்காவின் பங்களிப்பு, இரண்டு நாடுகளின் பொருளாதார உறவுகள் தொடர்பில் இருவரும் ஆழமான கருத்துக்களை பரிமாறினர். 

7M8A5241_Fotor

 

இலங்கையில் போர் நெருக்கடி முடிவுற்று தற்போது நாட்டில் அமைதி திரும்பியிருப்பதால் இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தை உருவாக்கவும், தனது நாட்டில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை இலங்கையில் பகிர்ந்துகொள்ளவும் தென்னாபிரிக்கா முன்வந்திருப்பது குறித்தும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த நாட்டுக்கு பாராட்டுக்களை வெளியிட்டார்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் என்றுமே வன்முறையில் நாட்டம் கொண்டவர்கள் அல்லர். நாங்கள் வன்முறையை எதிர்ப்பவர்கள். அதனைக் கண்டிப்பவர்கள். உள்நாட்டுப் பயங்கரவாதத்துக்கோ, உலகப் பயங்கரவாதத்துக்கோ நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. எந்தப் பயங்கரவாதிகளுடன் எமக்குத் தொடர்பும் இல்லை. நாம் நாட்டுக்கு விசுவாசமாக வாழ்ந்து வருபவர்கள்.

இந்நாட்டில் இனப்பிரச்சினையின் விளைவாக பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம் சமூகம் கால்நூற்றாண்டுகளாக அகதி முகாமில் கஷ்டப்பட்டு வருவதை நான் உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். வடமாகாணத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்த மக்கள் தென்னிலங்கை அகதி முகாம்களில் வாழ்க்கை நடத்துகின்றனர். சமாதானம் ஏற்பட்டு அவர்கள் மீளத்திரும்ப முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது முழுமையான சாத்தியப்பாட்டை தரவில்லை. சர்வதேச நாடுகளும் இந்த விடயத்தில் எமக்கு உதவியோ, ஒத்தாசையோ வழங்கவில்லை. இன ஒடுக்கு முறையால் பாதிப்புற்ற உங்கள் நாட்டு மக்கள் பட்ட கஷ்டங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். நீங்கள் ஈடுபடும் எந்த முயற்சியாயினும் சரி எம்மையும் கவனத்திற் கொள்ள வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம். 

இந்த சந்திப்பில் பங்கேற்ற தென்னாபிரிக்கத் தூதுவர், எமது நாட்டில் கடந்த காலங்களில் சந்தித்த அனுபவங்களை நாம் இங்கே பகிர்ந்துகொள்ளும் முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எமது அனுபவப் பகிர்வு உதவுமென நம்புகின்றேன். இலங்கையில் நிரந்தர சமாதானம் உருவாக எமது நாடு உதவும். ஏற்கனவே இது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக எமது நாட்டின் உப ஜனாதிபதி இங்கு விஜயம் செய்திருக்கிறார். தென்னாபிரிக்க குழுவினர் ஜனாதிபதி மைத்ரி, பிரதமர் ரணில் ஆகியோருடன் மேன்மட்டக் கலந்துரையாடல்களை நடாத்தியும் இருக்கின்றனர். வெகுவிரைவில் தென்னபிரிக்காவிலிருந்து உயர்மட்டக் குழு ஒன்று இங்கு விஜயம் செய்ய உள்ளது. 

தென்னாபிரிக்காவில் கேப்டவுனில் முஸ்லிம்கள், குறிப்பாக மலாய இனத்தவர்கள் செறிந்து வாழ்கின்றனர். நாம் அவர்களுடன் அந்நியோன்னியமாக பழகுகின்றோம். என்றும், தூதுவர் தெரிவித்தார்.

7M8A5256_Fotor

தென்னாபிரிக்காவின் அரசியல் அமைப்பை உள்ளடக்கிய கையடக்கமான ஆவணம் ஒன்றை அமைச்சரிடம் கையளித்த தூதுவர் இது மிகவும் எளிமையான ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி அனைவரும் விளங்கும் வகையில் உருவாக்கப்பட்டது என்றார். இலங்கையின் உத்தேச அரசியலமைப்புத் திட்டத்திற்கு இந்த யாப்பு உத்வேகம் அளிக்கக்கூடியது என்றும் தூதுவர் தெரிவித்தார்.