தமிழகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் : விஜயகாந்த் !

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

லஞ்சம், ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை பெருகியுள்ள மாநிலங்களின் வரிசைப்பட்டியலில் தமிழகமும் இருக்கிறதென ஒரு ஆய்வு கூறுகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை லஞ்சம், ஊழல், சுரண்டல் போன்ற தடைகள் ஏதுமின்றி, அதில் ஈடுபடுகின்ற முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கும் விதத்திலும், எச்சார்புமற்ற சுயேட்சையான, அதிகாரமிக்க அமைப்பாக லோக் ஆயுக்தா நீதிமன்றம் தமிழகத்தில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

Vijayakanth1
இந்தியாவில் ஏறத்தாழ 22 மாநிலங்களில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அல்லல்படுகின்ற மக்கள் குறைகளை கேட்டு, அவற்றை தீர்க்கும் வண்ணம் இந்த லோக் ஆயுக்தா அமைப்பு உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கவேண்டும் என்கின்ற அக்கறையும், ஆர்வமும் உண்மையாகவே இருக்குமேயானால், இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். அப்படி எடுக்கும் பட்சத்தில் தே.மு.தி.க. முழுமனதோடு அதை ஆதரிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, தமிழகத்தின் நலனுக்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்