ஒற்றையாட்சி முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை : சம்பந்தன் ஐயா !

ஒற்றையாட்சி முறைக்கு கொழும்பு அழுத்தம் கொடுத்தாலும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென எதிர்க்கட்சித் தலைவரும், தமிழரசுக் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று (21)தெரிவித்தார்.

Sambanthan

தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் அறிந்து அவற்றைக் கொண்டு அரசியலமைப்புத் தயாரிப்புக்கான கூட்டமைப்பின் யோசனைத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்புத் தயாரிப்பது தொடர்பாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கருத்துக்களை அறியும் நோக்கிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (21) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையிலேயே தீர்வு அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தோம். இதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இவ்வாறான நிலையில் ஒற்றையாட்சி முறைக்கு கொழும்பு அழுத்தம் கொடுக்க முயற்சித்தாலும் அதனை ஒருபோதும் தாம் ஏற்கப் போவதில்லையென்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அரசியலமைப்புத் தயாரிக்கும் செயற்பாடுகளில் தமிழ் மக்களின் கருத்துக்கள் அறியப்படும். தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் அறிந்து அரசியலமைப்பு யோசனை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய கூட்டத்தில் சமகால நிலைமைகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே சமஷ்டிக் கோட்பாட்டை தந்தை செல்வா தலைமையில் முன்வைத்தோம். சமஷ்டி என்கிற அதிகார பரவலாக்கம் கொண்ட விடயத்தை தான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டதாக வெளியில் தெரிவிக்கப்படுகின்ற விடயங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.