ஹாசிப் யாஸீன்
சாய்ந்தமருது கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் திடீர் விஜயம் ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.
இக்காரியாலயத்தில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்ப்பாசன பிரச்சினைகளான குடாக்கண்டம் மேல், குடாக்கண்டம் கீழ் ஆகிய கண்டங்களின் நீர்ப்பாசனத்திட்ட அபிவிருத்திகள் என்பன பற்றி பிரதி அமைச்சரின் கவனத்திற்கு உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.அஸீஸ் கொண்டு வந்தார்.
அத்துடன் கமநல சேவைகள் மத்திய நிலையத்தினுள் அமைந்;துள்ள விவசாய போதனாசிரியர் காரியாலயம், கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயம்; ஆகியவற்றிக்கும் விஜயம் செய்த பிரதி அமைச்சர் ஹரீஸ் அங்குள்ள குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.
சாய்ந்தமருது கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு நிரந்தர கால்நடை வைத்தியர் ஒருவர் கடந்த ஒரு வருட காலமாக நியமிக்கப்படாமை பற்றி உத்தியோகத்தர்களால் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை அடுத்து பிரதி அமைச்சர் ஹரீஸ், சாய்ந்தமருது கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். அத்தோடு சாய்ந்தமருது கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு நிரந்தர கால்நடை வைத்தியர் ஒருவரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.