யுத்தகாலத்திலும், யுத்தம் முடிவுற்ற பின்னரும் மன்னார் மாவட்டத்தின் எல்லைக்குள் வாழும் மக்களின் காணிகளை வனவளத்திற்குட்பட்ட காணிகளாக வன பரிபாலனத் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தலின் கீழ் பிரகடனப்படுத்தியுள்ளது. மக்களின் விருப்பத்திற்கு மாற்றமான இந்தப் பிரகடனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோருவதென மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் கொண்டுவந்த இந்த முன்மொழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜி.பி.எஸ் மூலம் காணிச் சொந்தக்காரர்களுக்கும் தெரியாமல் அவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்காமல், வனவளத்திணைக்கள அதிகாரத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அங்கு வலியுறுத்திய அமைச்சர் றிசாத், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளை ஒருதலைப்பட்சமாக வனவளத்திணைக்களம் மேற்கொள்ளக் கூடாது எனவும் யோசனை தெரிவித்தார்.
அத்துடன் மன்னார் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவி மீன் பிடிப்பதை தடை செய்யும் வகையில் வெளிவிவகாரா அமைச்சின் ஊடாக இந்தியத் தூதரகத்துக்கு கடிதம் ஒன்றை அபிவிருத்திக் குழு அனுப்ப வேண்டுமென்றும் அவர் யோசனை வெளியிட்டார். அமைச்சரின் இந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மன்னார் அரசாங்க அதிபர் தேசப்பிரியவின் நெறிப்படுத்தலில் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், முப்படைகளின் உயரதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் உட்பட பார்வையாளர் அந்தஸ்திலான பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாதென அறிவித்திருப்பதாக கூறப்பட்டது.
அரச அதிபர் தேசப்பிரிய சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் இந்தக் கூட்டத்தை நேர்த்தியாக நெறிப்படுத்தினார்.
வட மாகாண அமைச்சர் சட்டத்தரணி பா.டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் பிறிமு சிராய், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் உட்பட உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான யோசனைகளையும் கருத்துக்களையும் வெளியிட்டனர். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அபிவிருத்திக் குழு துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
வெள்ளாங்குளம் விவசாயப் பண்ணையின் ஒரு பகுதியை இராணுவம் ஆக்கிரமித்தமை, கூராய் மணல் அகழ்வுப் பிரச்சினை, கள்ள மரம் கடத்தல், தேவன்பிட்டி மீனவக் குடும்பங்களின் காணிப் பிரச்சினை போன்றவற்றை மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர். இது தொடர்பில் சமூகமளித்திருந்த அதிகாரிகளிடம், இணைத்தலைவர்களினால் அத்தருணத்திலேயே விளக்கம் கோரப்பட்டது. அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது. சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரச்சினைகளுடன் சம்பந்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
சுகாதாரப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, மின் இணைப்பு, விவசாயம் செய்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினை, வீடில்லா பற்றாக்குறை, வீதித் திருத்தம், கல்வித் தேவைகள், பாடசாலை வளப்பற்றாக்குறை ஆகியவை தொடர்பாக அமைச்சர் றிசாத், சிவசக்தி ஆனந்தன் எம்.பி, கே.கே.மஸ்தான் எம்.பி, மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் பிறிமு சிராய் ஆகியோர் தமக்குக் கிடைத்த புகார்களையும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். அத்துடன் மக்கள் நலத்திட்டங்களுக்கு கட்சி, இன, மத பேதம் பாராது மக்கள் பிரதிநிதிகள் இணைந்து பணியாற்றுவதெனவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
தனது அமைச்சின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரச்சினைகளையும், விடயங்களையும் முடிந்தவரையில் தனது அமைச்சின் ஊடாகவும், வேறு நிறுவனங்களின் உதவியுடனும் முடிந்தவரையில் தாம் தீர்த்துத் தருவதாக அமைச்சர் றிசாத் அங்கு தெரிவித்தார்.
தன் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்த அவர் அமைச்சர்களையும் சில பிரச்சினைகள் தொடர்பில் தனித்தனி சந்தித்து கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார்.