சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரகடனம் இழுத்தடிப்பு; சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – மறுமலர்ச்சி மன்றம் !

பி.எம்.எம்..காதர்

 

சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி மன்ற பிரகடனம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதி கூட நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதானது பெரும் கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மன்றத்தின் தலைவர் எம்.ஐ.ஏ.ஜப்பார் பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

2_Fotor

“சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் தேர்தல் முடிந்த கையோடு நிறுவப்படும் என்று கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது கல்முனை நகரில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அளிக்கப்பட்ட உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அவர் இந்த உத்தரவாதத்தை வழங்கியிருந்தார்.

அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக பொறுப்பேற்று பல தடவைகள், பல இடங்களிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முழுமை பெற்றதாகவோ தொடர்ந்தும் முன்னேடுக்கப்படுவதாகவோ தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் கண்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை பிரஸ்தாபித்திருந்ததுடன் 2016 ஜனவரி மாதத்தில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படும் என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான எச் எம் எம் ஹரீஸ் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை சந்தித்து இது விடயமாக பேசியபோது ஜனவரி மாதம் எப்படியும் நிறைவுக்கு கொண்டு வருவோம் என்கிற உறுதிமொழி வழங்கியதாக அறிய முடிகிறது. ஆனால் தற்போது ஜனவரி மாதத்தின் அரைப்பகுதி கடந்து விட்டது, எதுவும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை.

1

அரசியல் தலைமைகளினால் காலத்திற்கு காலம் காலக்கெடு சொல்லப்படுகிறதே தவிர அதற்கான உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக திருப்திகரமான பதில்கள் கிடைப்பதாக இல்லை. இவ்விடயத்தை முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்பேற்று பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் இழுத்தடிப்பு செய்வதன் மர்மம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ஒரு சிலர் வட்டார எல்லை நிர்ணய சர்ச்சையை காரணம் காட்டுகின்றனர். ஆனால் சாய்ந்தமருது பிரதேசத்தைப் பொறுத்தளவில் வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. சாய்ந்தமருது தெளிவான எல்லைகளுடன் ஆறு வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதுடன் அதன் ஒட்டு மொத்த நாலாபுற எல்லைகளும் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கென வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட்டிருப்பதை சுட்டி காட்ட விரும்புகின்றோம். தற்போது பேசப்படுகின்ற வட்டார முறை என்பது தேர்தல் நடாத்துவதற்கான முறையே அன்றி ஒரு உள்ளூராட்சி மன்றத்தினை உருவாக்குவதற்கு எந்த வித்தத்திலும் தடையாக இருக்கப் போவதில்லை என்பதை சம்பந்தபட்ட தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விடயத்தில் சாய்ந்தமருது மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்களா என்கிற சந்தேகம் வலுவடைவதுடன் வாய்மை தவறாத ரணிலின் வாக்குறுதி கூட காற்றில் பறந்து விட்டதா என்கிற கேளிவியும் எழுகிறது.

அரசியல் தலைமைகளின் வாக்குறுதிகளுக்காக மக்கள் வழங்கிய ஆணை இவ்வாறு தொடர்ந்தும் மலினப்படுத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்பதை அந்த மக்கள் சார்பில் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்விடயத்தை இன்னும் இன்னும் எதிர்வரும் தேர்தல்களுக்கான வாக்குறுதிகளாக கொண்டு செல்லும் திட்டத்துடன் அது இழுத்தடிப்பு செய்யப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இது மிகவும் மன வேதனைக்குரிய விடயமாகும்

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலின்போது சாய்ந்தமருதுக்கு தனியான தேர்தல் நடைபெறும் என்று ரவூப் ஹக்கீம், ஹரீஸ் போன்றோர் கூறி வந்தனர். எனினும் கல்முனை மாநகர சபையின் ஆட்சிக் காலம் கடந்த 2015 ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவிருந்த போதிலும் அக்காலம் இரண்டு தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் உரிய காலத்துடன் மாநகர சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடந்திருந்தால் சாய்ந்தமருதின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்ட விடயம் பின்னர் தேர்தல் வந்ததும் தேர்தல் காலம் என்பதால் செய்ய முடியாது என்று கூறப்பட்டது. அது போல் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வந்த பின் மீண்டும் தேர்தல் காலத்தினுள் நிறைவுக்கு கொண்டு வர முடியவில்லை என்கிற நொண்டிச்சாட்டு சொல்லப்பட்டிருக்கும்.

இந்நிலையில் சாய்ந்தமருது மக்களின் அதிஷ்டமோ துரதிஷ்டமோ தெரியாது உள்ளூராட்சித் தேர்தலுக்கான காலம் நீடிக்கப்பட்டு, இன்னும் சற்று அவகாசம் கிடைத்திருக்கிறது. ஆகையினால் இக்காலப் பகுதியிலாவது சாய்ந்தமருது மக்களின் உரிமையை வென்று கொடுக்க அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.