எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த அரசாங்கம் இனவாத மோதல் ஒன்றை உருவாக்கி வருகின்றது : விமல்

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த அரசாங்கம் இனவாத மோதல் ஒன்றை உருவாக்கி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
images

பத்தரமுல்லையில் உள்ள முன்னணியின் தலைமையகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
 
அரசாங்கத்தின் மீது நாளுக்கு நாள் மக்களின் அதிருப்தி அதிகரித்து வரும் போது, எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த, ஒவ்வொரு துரும்புச் சீட்டுக்களை எடுத்து அவற்றில் பலன் கிடைக்காத நிலையில், கறுப்பு ஜூலை போன்ற இனவாத மோதலை ஏற்படுத்த தயாராகி வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அன்று கறுப்பு ஜூலை கலவரத்தை ஏற்படுத்தி தமிழ், சிங்கள மக்கள் இடையே பிளவை ஏற்படுத்தியது. அதற்கான பொறுப்பை எதிர்க்கட்சிகள் மீது சுமத்தி, அந்த கட்சிகளை தடைசெய்தது.

இவ்வாறான அடக்குமுறை மூலம் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் தமக்கு எதிராக எழும் மக்கள் எதிர்ப்பை இரத்தத்தின் மூலம் அடக்கியது.

இந்த பழைய துரும்பை மீண்டும் கையில் எடுக்க அரசாங்கத்திற்குள் தயார்நிலை ஒன்று இருக்கின்றது என்ற எச்சரிக்கையை நாங்கள் விடுக்கின்றோம். சில நேரம் இது முஸ்லிம், சிங்கள மோதலாக இருக்கக் கூடும் எனவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.