இலங்கையின் வரலாற்றில் தற்போது மிகவும் நம்பிக்கைக்கொண்ட நேரம் வந்துள்ளது: எரிக் சொல்ஹெய்ம்

போர் முடிவடைந்த நிலையில் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளுக்கு சர்வதேசத்தின் பாரிய அர்ப்பணிப்பு அவசியம் என்று இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
erik-solheim-srilanka

கடந்த 14ஆம் திகதியன்று அட்லாந்திக் பேரவையில் வைத்து இந்தக்கருத்தை அவர் வெளியிட்டார். 

சர்வதேச அரசியல் சிந்தனையாளர்களால் 1961ஆம் ஆண்டு நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்டு அட்லாந்திக் பேரவை உருவாக்கப்பட்டது. 

இந்த பேரவையினால் சர்வதேச அரசியல், வர்த்தகம் மற்றும் புத்திஜீவிகளை கொண்டு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இதன்படி கடந்த 14ஆம் திகதியன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் சொல்ஹெய்ம் கருத்துரை வழங்கியுள்ளார். 

சர்வதேச நாடுகளின் அர்ப்பணிப்பு முழுமையாக இல்லாமை காரணமாகவே இலங்கையின் படையினர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடும் போரை நடத்தினர். இதன்போது போர்நிறுத்த உடன்பாடும் தோல்வியடைந்தது. 2009ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளை தோற்கடித்து விட்டதாக அறிவித்தது. இதன்போது 100>000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. அதுவும் இறுதி நாட்களில் மாத்திரம் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர் என்று சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ராஜதந்திர முயற்சிகளை இந்தியா, ஜப்பான், நோர்வே போன்ற நாடுகள் மேற்கொண்டன. 

எனினும் அதற்கு அப்பால் வெளியில் பாரிய சர்வதேச பங்கேற்பாளர்களின் அவசியம் இருந்தது என்றும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார். 

அட்லாந்திக் பேரவையின் தென்னாசிய நிலையத்தின் இந்த கலந்துரையாடலில், ஜோர் டபில்யு புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, உதவி ராஜாங்க செயலாளராக கடமையாற்றிய ரிச்சட் ஆமிடேஜ், உள்நாட்டு போர் முடிவு நூலின் ஆசிரியர் மார்க் சோல்டர் மற்றும் அட்லாந்தின் பேரவை தென்னாசிய நிலையத்தின் பணிப்பாளர் பாரத் கோபாலசாமி ஆகியோர் பங்கேற்றனர். 

இதன்போது கருத்துரைத்த ரிச்சட் ஆமிடேஜ், இலங்கையின் அரசியல் தலைமைகளும் விடுதலைப்புலிகளும் மேற்கொண்ட அலட்சியப்போக்கு காரணமாகவே சமாதான முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் பங்கேற்பாளர்களுக்கு அமைதி தேவைப்பாடு இல்லாமல், அமைதியை ஏற்படுத்த முடியாது என்று பாடம் புகட்டப்பட்டுள்ளது என்றும் ஆமிடேஜ் தெரிவித்தார். 

இதன்போது போர் உத்திகள் இருந்தபோதும் ராஜதந்திர முனைப்புக்களின் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்கள் நால்வரும் கலந்துரையாடினர். 

இந்தநிலையில் கருத்துரைத்த சோல்ட்டர், நோர்வேயின் அனுசரணையிலான அமைதி நடவடிக்கையின்போது அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு இடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வேண்டியிருந்தது. இந்தநிலையில் இந்த ஒருமைப்பாட்டை கொண்டு வர விடுதலைப்புலிகளுடன் அதிக ஈடுபாடு அவசியமாகியிருந்தது என்று கூறினார். 

இந்தநிலையில் தற்போது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த அரசியல் தீர்வை அடைய, சர்வதேச அழுத்தம், ராஜதந்திர நகர்வுகள் மற்றும் வெளிநாட்டு உதவிகள் என்பன அவசியம் என்றும் சோல்ட்டர் குறிப்பிட்டார். 

இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றசாட்டுக்கள் மற்றும் ஊழல்கள் என்பவற்றுக்கு மத்தியில், அமைதிக்காக நம்பிக்கை குறித்து சொல்ஹெய்ம் இதன்போது கருத்துரைத்தார். அத்துடன் இலங்கையின் வரலாற்றில் தற்போது மிகவும் நம்பிக்கைக்கொண்ட நேரம் வந்துள்ளது. இதுபோன்ற வாய்ப்பு மீண்டும் வராது என்றும் அவர் தெரிவித்தார்.