ஸ்ரீ. சு. கட்சி முன்வைத்துள்ள திருத்த யோசனைகளை பிரதமர் நிராகரிப்பு !

அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் நல்லாட்சிக்குள் பாரிய கருத்து முரண்பாடுகள் நிலவிவருவதால் இச்சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதி பெறப்பாடமல் நாடாளுமன்றத்தில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.

இதனாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திருத்த யோசனைகள் முன்வைத்துள்ளது. இவற்றினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக சு.க. கூறினாலும் அதனை அவர் நிராகரித்துள்ளார். 

இவ்வாறு கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்தது. 

அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள திருத்த யோசனைகளும் கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ள யோசனைகளும் ஒத்துள்ளதுடன், இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்த போதிலும், பிரதமர் ரணில் அதனை நிராகரித்துள்ளார் என்றும் கூட்டு எதிர்க்கட்சி கூறியது. 

பொரள்ளையில் அமைந்துள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தினேஷ் குணவர்தன எம்.பி., பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எம்.பி. ஆகியோர் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- 

பிரதமர் முன்வைத்துள்ள அரசமைப்பு யோசனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையினர் அதிருப்தியில் உள்ளதுடன் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 

அரசமைப்பு உருவாக்கத்துக்காக நாடாளுமன்றத்துக்குப் புறம்பாக வேறு ஒரு நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்திருந்தார். இது நாடாளுமன்றத்துக்கு இருக்கும் அதிகாரத்தைக் குறைக்கும் செயலாகும். 

நல்லாட்சி அரசு முன்வைத்த வரவு -செலவுத் திட்டம் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நிறைவேற்றப்பட்டது. 

எனினும், திருத்தப்பட்டவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளனர். அவர்களது வரவு – செலவுத் திட்டம் இன்னும் உறுதியான நிலைப்பாட்டில் இல்லை. அதேபோன்று, அரசமைப்பு உருவாக்கமும். 

கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியபோது பிரதமர், ஜனாதிபதியுமே பேசியிருந்தனர். 12ஆம் திகதி 4 மணித்தியாலங்கள் மட்டுமே சபை அமர்வு இடம்பெற்றது.

இரவு வரை நீடிப்பதற்கு நேரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது, எதிர்வரும் 26ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ளது. 

மாதம் எட்டு தடவை கூட வேண்டிய நாடாளுமன்ற அமர்வைப் பிற்போடுவதன் மூலம் இவர்கள் காலத்தை தாமதித்து நோக்கங்களை மாற்ற முற்படுகின்றனர். 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களை அடக்கி ஒரு சிலரே இந்த அரசமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளனர். நடைமுறைப்படுத்தும் குழு ஒன்றின் மூலமாக அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறும். அதன் தலைவராக பிரதமர் இருப்பார். 

தேவை ஏற்படின் உப குழுக்கள் அமைக்கப்படும். அதன் உறுப்பினர் தெரிவு, அறிக்கை என்பன நடைமுறைப்படுத்தும் குழுவே தீர்மானிக்கும்.

இக்குழுவே சகல அதிகாரங்களையும் பெற்றிருக்கும். இந்நடைமுறையானது அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஆரோக்கியமான செயல் அல்ல என்றனர்.