மதவாத அரசியலை புறக்கணிக்க வேண்டும்: அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா பேச்சு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் சில வேட்பாளர்கள் பிறமதத்தினரின் மனங்களை காயப்படுத்தும் வகையிலான பிரச்சாரபாணியை கடைபிடித்து வருவதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, மதவாத அரசியலை புறக்கணிக்க நாம் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Obama2

இரண்டாவது அதிபர் பதவிக் காலத்தில் தனது இறுதி பாராளுமன்ற உரையை நிகழ்த்திய பராக் ஒபாமா பேசியதாவது:-

“இந்த மக்களாகிய நாம்” என்னும் மூன்று எளிமையான வார்த்தைகளுடன் நமது அரசியலமைப்பு சட்டத்தின் முதல்வரி தொடங்குகின்றது. இந்த மூன்று வார்த்தைகளும் “மக்களாகிய நாம் அனைவரும்” என்னும் அர்த்தத்தையே குறிப்பிடுகின்றது. யாரோ சிலர் என்பது இதன் பொருளல்ல, உயர்ந்தாலும், வீழ்ந்தாலும் ஒன்றாக உயர்வோம் – ஒன்றாகவே வீழ்வோம் என்பதே இந்த வார்த்தைகளுக்கான உண்மையான உட்பொருளாகும்.

நம்மிடம் இருக்கும் ஆயுத பலத்தை மட்டும் பார்த்து இந்த உலகம் நம்மை மதிக்கவில்லை. நமது பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்து மதநம்பிக்கைகளுக்கும் நாம் மதிப்பளிக்கும்விதம் ஆகியவற்றை வைத்தே நம்மை இந்த உலகம் மதிக்கின்றது.

மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் மக்களை குறிவைத்து நடத்தப்படும் அரசியலை நாம் புறக்கணிக்க வேண்டும். இது அரசியலை திருத்தும் முயற்சியல்ல, மாறாக, நம்மை பலம்மிக்கவர்களாக மாற்றும் புரிதலுக்கான முயற்சியாகும்.

முஸ்லிம்களை அரசியல்வாதிகள் இழிவுப்படுத்துவதும், மசூதிகள் சூறையாடப்படுவதும், ஒரு குழந்தையை வேடிக்கைக்காக துன்புறுத்துவதும் நாம் பாதுகாப்பாக இருப்பதற்கான செயல்களல்ல; இதுதவறானது, இதுபோன்ற செயல்கள் உலகின் கண்களில் நம்மை தரம்தாழ்த்தி காட்டிவிடும்.

இதனால் நமது இலக்குகளை எட்டுவது கடினமாகிவிடும். ஒருநாடாக நாம் எப்படி உள்ளோம்? என்பதை அவமதிக்கும் வகையில் இத்தகைய செயல்கள் அமைந்துவிடும்.

தற்போது இங்கே, கட்சிகளுக்கிடையே கசப்புணர்வும், சந்தேக மனப்போக்கும் மிகமோசமாக வளர்ந்துள்ளதை இந்த நாட்டின் அதிபராக எனது பதவிக்காலத்தில் வருத்தத்துக்குரிய சில விஷயங்களில் ஒன்றாக கருதுகிறேன். ஆபிரகாம் லிங்கன், ரூஸ்வெல்ட் போன்ற முன்னாள் அதிபர்கள் தற்போது இருந்திருந்தால், இந்த பிரிவினையால் ஏற்பட்ட இடைவெளியை இணைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பதவியில் நான் இருக்கும்வரை அதற்கான சிறப்பு முயற்சியில் ஈடுபடுவேன் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.