எங்கே? எப்போது? தன் தந்தை தன்னோடு அன்பாக பழகப் போகிறார் ?

இவனும் ஒரு  தந்தையா…?

Unforgettable Quotes by Jim Rohn_0

நாளை ஹசனிற்கு ஏ.எல் தகுதிகாண் பரீட்சை.ஓலைக் குடிசைக்குள்ளும் படித்து பட்டம் பெற்றுவிடலாம்.ஹசனின் தந்தையின் அலட்டலைக் கேட்டுக் கொண்டு ஒரு நொடியும் அவனால் படிக்க முடியவில்லை.அதுவும் ஆண்டுகள் அடுக்கடுக்காய் வரும் அரசியலை எவ்வாறு அவன் படிப்பது? மாலை நேர வகுப்புக்கள் முடிந்துவிட்டால் பாடம் மீட்ட நண்பர்களின் ரூமிற்கு சென்று விடுவான்.இளம் வயது நண்பர்களின் ரூம் என்றால் பத்தினியும் பத்தியம் கலைத்து விடுவாள்,இன்றைய உலகில் ஹசன் போன்ற இளைஞர்கள் எம்மாத்திரம்? நேரம் எத்தனை தான் சென்றாலும் தூங்க வீடு வருவது தான் ஹசனின் தாய் பழக்கிய பழக்கங்களில் ஒன்று.

“படுக்குற படுவையைப் பாரு..! ஏதோ கிழிச்சுப் போட்டு படுக்காரு போல.அந்த பாலத்தடி பாறூக்குட மகன்ட கூட சேந்து ராவு புள்ளா அவள்ற இவள்ற பொழக்கடைக்குள்ளால பூந்து கோழிய களவெடுத்து ஆக்கி திண்டிட்டு படுக்குற படுதான் இது.அடியேய் இவன ஒழுப்புடி.”

என்ற தனது தந்தையின் கடுமையான வார்த்தைகள் தான் ஹசனின் காதுகளில் காலையில் ஒலிக்கும் முதல் வார்த்தைகளாய் அமையும்.இதைப் போன்ற வார்த்தைகள் அவன் காதுகளுக்கு கிட்டாமல் அவன் தூக்கம் கலைய மாட்டான்.இவ் வார்த்தைகள் அவனது தாயின் காதுகளுக்கு கிட்டினால்,எலுமிச்சை இலை போட்ட தேனீரோடு அவன் அறைக்குள் நுழைவாள்.அவனும் நிறை நித்திரை இல்லாமல் புடைத்துப் போன புருவங்களோடும்,பூளை கக்கிய கண்களை கசக்கிக் கொண்டும் தேனீர் கோப்பையினை கையில் எடுத்து அருந்துவான்.குசு குசு மொழியில் தாயும் சேயும் உரையாடுவதை வைத்து அவன் தந்தை ஹசன் எழும்பி விட்டான் என்பதை அறிந்து கொண்டு அவனிடம் அன்றைய நாள் வேலைகளை அடுக்குவார்.சாய் மனையில் கால் மேல் கால் போட்டு மார்க் பீடி அடித்துக் கொண்டு அவர் கூறும் ஏவல்களினை செய்து முடிக்க இவன் மனம் ஒரு போதும் ஓடிச் செல்லுவதில்லை.சொந்தக் காலில் நிற்க இயலாது தந்தையின் தயவில் வாழும் இவனால் எதிர்த்து நிற்கவும் முடியாது.என்ன செய்வது? நாய்க்கு வாக்கப்பட்டால் குரைத்துத் தானே ஆக வேண்டும்?

தனது தந்தையின் கடின வார்த்தைப் பிரயோகம் புளித்துப் போன ஒன்றாக இருந்தும் ஹசனின் ஆள் மனதில் குத்திக் கொண்டு தான் இருக்கும்.காலையில் எழுந்து சுறு சுறுப்புடன் இயங்க நினக்கும் அவன் உள்ளத்தை அவரின் வார்த்தைகள் அப்படியே முடக்கி விடும்.ஆங்காங்கே உஜாலாவினால் கோடிழுக்கப்பட்ட பாடசாலை சீருடையை அணிந்து கொண்டு தான் அவர் கூறும் பல வேலைகளை ஹசன் செய்து முடிப்பது வழமை.செய்கின்ற ஒவ்வொரு வேளையும்.

“இது தானோ என் தலையில் எழுதியுள்ளது?’

என தனது விதியை நொந்து கொள்வான்.

“இன்று பரீட்சையல்லவா? இன்றாவது அவன் தந்தை அவனின் காலை வேலைக்காவது விடுமுறை வழங்கக் கூடாதா?”

என அவன் தாய் ஏக்கத்துடன் தனக்குள்ளேயே கேள்வி எழுப்பிக் கொண்டாள்.அவனது தாயின் மனதில் நினைப்பதை அறிந்தாவது விடுமுறை வழங்க அவன் தந்தை என்ன முனிவரா? பரீட்சை நாள் அன்றும் ”எடு புடி” என அவர் கூறியவற்றை செய்து விட்டு பரீட்சைக்குச் சென்றான்.

ஹசன் தனது வீதியில் உள்ள தனது நண்பன் நபாறினை அழைத்துக்கொண்டு பாடசாலை செல்லுவது தான் ஹசனின் வழமைகளில் ஒன்று.மிஞ்சி மிஞ்சி போனால் நாற்பது மார்க் எடுக்கும் நபாறினை அவன் தந்தை ஆயிரம் அறிவுரைகளோடும்,நாலாயிரம் நேர்ச்சைகளோடும் தகுதிகாண் பரீட்சைக்கு அனுப்பியது இவனுக்கு விசித்திரமாய் இருந்தது.

“இவனுக்கே இப்படி என்றால் எண்பதுக்கு குறையாமல் மார்க் எடுக்கும் என்னை எப்படி அனுப்ப வேண்டும்?”

என தனக்குள் அங்கலாய்ப்போடு கேட்டுக் கொண்டது ஹசனின் ஏக்கம் நிறைந்த உள்ளம்.நபாறின் துவிச்சக்கர வண்டியில் இருந்து வெளிப்பட்ட சத்தம் அன்பில் நனைந்த மகிழ்ச்சியில் ஆர்வரிப்பது போன்றிருந்தது.தனது துவிச்சக்கர வண்டி சத்தம் போடாமல் இருக்க வேண்டும் என சிந்திக்கும் பலரிடையே

“தனது துவிச்சக்கர வண்டியும் சத்தம் போடாதா?”

என ஹசன் தனது துவிச்சக்கர வண்டியையும் நொந்து கொண்டான்.அன்று அவன் கண்களுக்குப் புலப்படும் ஒவ்வொரு விடயங்களையும் ஹசன் தன் தந்தை தன்னோடு பழகுவதோடு ஒப்பிட்டுக் கொண்டான்.இதுவெல்லாம் சிந்திக்கும் நேரமா இது?

“எங்கே? எப்போது? தன் தந்தை தன்னோடு அன்பாக பழகப் போகிறார்?”

என்ற ஏக்கம் நிறைந்த உள்ளத்திற்கு இதனையெல்லாம் சிந்திக்க எப்போது என்றிருக்கிறது?

தன் தந்தையின் வழமையான அரட்டலை இன்று மட்டும் ஹசனின் உள்ளம் ஏன் பெரிதாக தூக்கிக்கொண்டது?

“ஓ“

“இன்று அவன் உள்ளம் தந்தை அன்பை எதிர்பார்த்திருக்கின்றதோ?”

பரீட்சை என்பதால் வீதிகளில் வழிந்தோடும் பெற்றோர்களின் அன்புகளும்,கரிசனைகளும் இவனுக்கு இதனைத்  தூண்டும் ஊக்கியாய்த் தொழிற்பட்டுள்ளது

 

உடல் பாடசாலை நோக்கி நகர்ந்த போதும் அவன் உள்ளம் என்னவோ? அவன் தந்தை பக்கமே இருந்தது.வரும் வழியில் தன் முன் யார் வருகிறார்கள்? என்ன போகிறது? என்பதைக் கூட அவனால் கவனிக்க முடியவில்லை.வழமையாக வீதியின் ஓரிடத்தின் ஓரத்தில் தன் காதலியை கண்களால் சந்திப்பதைக் கூட அவன் அன்று மறந்துவிட்டான்.ஹசனது சிந்தனை சென்ற வழி விபத்துக்களை விலை கொடுத்து வாங்கியது.யார் செய்த புண்ணியமோ விபத்துக்களை இவன் நாடிய போதும் விபத்துக்கள் இவனை நாட வில்லை.விபத்தும் இவன் தந்தை போன்று இவன் மீது கரிசனை கொள்ளவில்லையோ? பாடசாலை சென்றடைந்த ஹசன் துவிச் சக்கர வண்டியை விட்டு இறங்கிய போது பெடில் தடக்கி சறுக்கி விழுந்தும் விட்டான்.சிந்தனை எங்கோ இருந்தால் இதுவெல்லாம் நடப்பது வழமை தானே? முழங்கையில் சிறு கோடிழுக்கப்பட்ட கீறல்களினூடாக  இரத்தம் எட்டிப் பார்த்தது.இவன் தானாய் தேடிச் சென்ற பெரிய விபத்துக்களில் இருந்து காப்பாற்றிய இறைவன் சிறியதொரு விபத்தினால் அதனை  சரி செய்து கொண்டானோ?

இரத்தத்தை துடைத்தது பாதி துடைக்காதது பாதியாய் அப்படியே சென்றான்.அவ் இரத்தத்தை உறிஞ்ச மண் கூறுகள் சிலவும் அவனோடு பயணித்தன.அவனது மனதை ஆட்கொண்டிருந்த வலியின் முன் இதுவெல்லாம் ஒரு வலியாகவே ஹசனிற்கு விளங்கவில்லை.விழுந்ததன் வலி சிந்தனை செம்மை அடையும் போது தான் இருக்கிறது? அப்படியே பரீட்சை மண்டபத்தை சென்றடைந்தான் ஹசன்.ஹசன் பரீட்சை மண்டபத்தின் ஓரத்தில் பரீட்சை மண்டபத்தினுள் நுழையும் நேரத்திற்காய் காத்துக் கொண்டு நின்றான்.பரீட்சை மேற்பார்வையாளர்கள் பரீட்சை அறையினுள் போவதும் வருவதுமாக இருந்தார்கள்.இவனது தந்தை பற்றிய சிந்தனை ஹசனின் முகத்தின் பொலிவினை களவாடிக் கொண்டது.கண் எதிரே ஒரு பெரிய பூவின் கீழ் சிறியதொரு பூ நிழல் பெற்றுக் கொண்டிருந்ததை பார்த்த ஹசனின் உள்ளத்தில் ஏனோ தெரியவில்லை? வேதனை அதிகரிக்கலானது.

பரீட்சை மேற்பார்வையாளர் பிட்டு பரிசோதித்து மாணவர்களை பரீட்சை அறையினுள் அனுமதிக்கும் நேரமும் வந்தது.எந்த நேரமும் புண் முறுவல் பூத்த இவன் முகத்தைக் கண்டு பழக்கப்பட்ட அவனின் ஆசிரியர் இவன் முகத்தில் காணப்பட்ட ஏக்கத்தினை பதட்டமாய் கணக்குப் போட்டு பிட்டுப் பரிசோதனையில் சற்று அதிகமாக இவனை உள்ளடக்கினார்.இதுவும் இவன் உள்ளத்து வேதனையை இன்னும் அதிகரிக்கச் செய்தது..

பரீட்சை மண்டபத்தில் உடைந்த கதிரையும்,தள தளவென ஆடும் மேசையுமே ஹசனுக்கு கிடைத்தன.இறைவனுக்கும் தன் மீது அன்பில்லையோ? என அவனது உள்ளம் இறைவனையும் நொந்துகொண்டது.இதனை பரீட்சை மேற்பார்வையாளரிடம் முறையிட சிந்தனை கொண்ட போதே தான் தகுதி காண் பரீட்சைக்குத் தான் இங்கு வந்துள்ளேன் என்பதை ஹசன் உணர்ந்து கொண்டான்.இவனது முறையீட்டைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பஞ்சு போல் பறந்து புது மேசை கதிரை எடுத்துக் கொடுத்தனர்.ஆசியர்கள் காட்டிய அக்கரையே இப் பரீட்சையின் முக்கியத்துவத்தை ஹசனிற்கு உணர்த்தியது.உடைந்த கதிரை மேசை தான் இவனின் வாழ்க்கைத் திருப்பத்திற்கு இறைவன் ஏற்படுத்திய வழி என்பதை பிறகு தான் ஹசன் உணர்ந்து கொண்டான்.

“நான் இந்த நேரத்தில் இப்படி உள்ளேனே? இது எனது வாழ்க்கையைத் தானே பாதிக்கப்போகிறது? இதனை சிந்தித்தால் மட்டும் எனது பிரச்சினை தீர்ந்துவிடுமா? நபாறிற்கென்ன அவன் தந்தை கூலி வேலை செய்தாவது அவனை உயர் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்.எனக்கு யார் உதவி செய்வார்கள்? இச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் நான் என்ன செய்வது? இதிலும் நான் தேறாவிட்டால் எனது நிலை?”

போன்ற வினாக்களினை தனக்குள் எழுப்பி விடை பெற்ற ஹசனிற்கு பரீட்சையில் வெற்றி பெறுவதே இதற்கெல்லாம் ஒரே தீர்வாய்த் தோன்றியது.எங்கே பரீட்சைப் பேப்பர்? என பேப்பரை நோக்கி அவன் உள்ளம் அங்கலாய்ப்போடு திரும்பியது.பேப்பரும் கையில் வந்தது.அவன் சிந்தனையில் ஒரு தெளிவு ஏற்பட்டது.நோக்கமேல்லாம் பரீட்சையில் மாத்திரமே இருந்தது.ஹசன் இரவெல்லாம் குந்திப் படித்தது பேப்பரில் வராது போனாலும் எப்போதோ படித்ததெல்லாம் நினைவுக்கு வந்து பரீட்சையை திறம்பட எதிர்கொண்டான்.இதன் பிறகு வரும் ஏ.எல் பரீட்சைக்கு எப்படிப் படிப்பான் என்பதை சொல்லவா வேண்டும்?

நேரகாலத்துடன் பேப்பரினைக் கையளித்து விடை பெற்ற ஹசனின் ஆசிரியர் அவன் பேப்பரினை கண்ணால் நோட்டமிட்டார்.அனைத்து விடைகளும் பக்காவாக இருப்பதை அறிந்துகொண்டார்.உடனே தனது தொலை பேசியை எடுத்து ஹசனின் தந்தைக்கு கிறுக்கினார்.

“பெற்றால் இவனைப் போல ஒரு புள்ளை பெறனும்.இன்னும் கொஞ்ச நாள் தான் ஏ.எல்கு இரிக்கி.ஹசனை நல்லா பார்த்துங்கங்க.எமதூரின் வரலாற்றில் முதல் வழக்கறிஞ்ஞர் ஹசனாகத் தான் இருப்பான்.”

எனப் புகழ்ந்தார்.ஒரு தந்தைக்கு இதை விட என்ன தான் புகழாரம் வேண்டும்?

ஹசனின் தந்தையோ

“ஆ.. சரி.. சரி…”

என்ற வார்த்தைகளோடு தொலைபேசியை நிறுத்திக் கொண்டார்.

 

 துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 

சம்மாந்துறை.