எகிப்து நாட்டில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பாராளுமன்றம் கூடியது.
பொதுமக்கள் புரட்சியை அடுத்து எகிப்து நாட்டில் ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு கால ஆட்சி 2011–ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து முகமது மோர்சி, தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி அதிபர் ஆனார். ஆனால் அவரது ஆட்சியும் அங்கு நிலைக்கவில்லை.
2013–ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. தளபதி அப்துல் பட்டா எல் சிசி அதிபர் ஆனார். இதனையடுத்து அந்த நாட்டின் பாராளுமன்றத்தை கலைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்போது புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிபர் எல் சிசிக்கு ஆதரவான கூட்டணி அதிக இடங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் 596 உறுப்பினர்களை கொண்ட எகிப்து நாட்டின் பாராளுமன்றம் முதல் முறையாக கூடி உள்ளது.