ஹைட்ரஜன் குண்டை வெடித்து பரிசோதித்ததாக சமீபத்தில் வடகொரியா அறிவித்துள்ள நிலையில் தென்கொரிய வான் எல்லையில் இன்று வட்டமிட்ட அமெரிக்காவின் அதிநவீன போர் விமானம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே கடந்த புதன்கிழமை ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
முன்னதாக, இது சாதாரண நிலநடுக்கம்தான் என வடகொரிய மக்கள் நம்பிவந்த நிலையில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா ராணுவ வட்டாரங்களும் ஜப்பானும் சந்தேகம் எழுப்பின.
இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வடகொரியா, ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம் என்று தெரிவித்தது.
உலக வரலாற்றில் என்றும் மறக்க முடியாத கொடூரமான ஹிரோஷிமா நாகசாகியில் நடந்த போரில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து ஹைட்ரஜன் குண்டால் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாவது முறையாக வடகொரியா வெற்றிகரமாக அணு ஆயுத பரிசோதனை செய்தது நினைவிருக்கலாம்.
இந்த சோதனையை அணு ஆயுத பரவல் ஒப்பந்த மீறல் என குற்றம்சாட்டி, அப்போது அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்த வேளையில் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு தன்னிடம் ஆயுத பலம் இருப்பதாக வடகொரியா சவால் விட்டது. இந்நிலையில், இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனைக்குப் பிறகு அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அணு ஆயுத திட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் என வடகொரியா வெளிப்படையாக அறிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த அடாவடித்தனத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. அந்நாட்டின்மீது புதிய பொருளாதார தடையை விதிக்க தீர்மானித்துள்ள ஐ.நா.பாதுகாப்பு சபை இதுதொடர்பாக அறிக்கை தயாரித்து வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான B-52 bomber ரக குண்டுவீச்சு போர் விமானம் இன்று தென்கொரியா நாட்டின் வான் எல்லையில் வட்டமிட்டு பறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த அதிநவீன ரக போர் விமானம் தென்கொரியா வான் எல்லை மீது பறந்து தென்கொரியா மற்றும் வடகொரியாவின் எல்லைப்பகுதியான தெற்கு சியோல் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்ட்டர் தூரத்தில் ஓஸான் என்ற இடத்தில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் பத்திரமாக தரையிறங்கியதாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
B-52 bomber விமானத்துக்கு பாதுகாப்பாக அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான F-16 மற்றும் தென்கொரிய விமானப்படைக்கு சொந்தமான F-15 ரக விமானங்கள் பாதுகாப்பிற்காக சென்றதாக தெரிகிறது.