சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக புதிய கிரிக்கெட் அமைப்பு உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த அமைப்பு டி20 தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2007ல் கபில் தேவ் தலைமையில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பு உருவானது. அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.,), 2008ல் ஐ.பி.எல். அமைப்பை தொடங்கி போட்டிகளை நடத்தியது.
லலித் மோடி தலைமையில் ஐ.பி.எல் தொடர் வெற்றிகரமாக நடக்க, ஐ.சி.எல்., அமைப்பு காணாமல் போனது. பின் லலித் மோடி, நிதிமுறைகேடு குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட, தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார்.
தற்போது இந்த புதிய அமைப்பு லலித் மோடி ஆலோசனையில், உருவாக்க முயற்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் புதிய கிரிக்கெட் அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட புதிய கிரிக்கெட் அமைப்பு சார்பில், மைக்கேல் கிளார்க், டேவிட் வார்னரை ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளனர்.
10 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் இவர்களுக்கு தலா ரூ. 320 கோடி வரை கொடுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (சி.ஏ.,) மறுத்துள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூர் கூறுகையில், கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் ஒரே அமைப்பு ஐ.சி.சி., மட்டும் தான்.
புதிய அமைப்பில் இணையும் முன், ஒன்றுக்கு 10 முறை யோசித்து வீரர்கள் செயல்பட வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை வீரர்களை பி.சி.சி.ஐ.,யில் இருந்து பிரித்து எடுப்பது மிகவும் கடினம். ஏனெனில் வீரர்களின் நீண்ட நாள் நலனுக்காக பல உதவிகளை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.