பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத் தளத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் கடந்த 2ந்தேதி முதல் 4 நாட்களாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீடித்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 7 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு மீதும் தீவிரவாதிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். நவாஸ் ஷெரீப்பும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் இன்று இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பதன்கோட் தாக்குதல் குறித்தும், இந்தியா இதுவரை பகிர்ந்து கொண்டுள்ள ஆதாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தியா வழங்கியுள்ள ஆவணங்களின் படி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என முடிவு செய்ததாகவும் அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் பதன்கோட் தாக்குதல் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும், இந்தியா வழங்கிய ஆதாரங்களின் படி விசாரணையை துரிதப்படுத்துமாறு தனது அதிகாரிகளுக்கு நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த கூட்டத்தில், அந்நாட்டு நிதி மந்திரி நிஷார் அலி கான், உள்துறை மந்திரி சர்தாஜ் ஆஜிஸ், லெப்டினட் ஜெனரல் (ஒய்வு) நாசர் கான் ஜனுஜா, வெளியுறவுத்துறை செயலர் அப்தாப் சுல்தான் மற்றும் உளவுத்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.