அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வர புதிய சட்ட விதிமுறைகள் உருவாக்கப் போவதாகவும், இதை தனது சிறப்பு அதிகாரத்தை கொண்டு நிறைவேற்றப் போவதாகவும் அதிபர் ஒபாமா கூறி இருந்தார்.
இதற்கு குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முயற்சித்து வரும் டொனால்டு டிரம்ப் ஒபாமாவின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இருக்கும்போது அதை மீறி தனது அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கி கட்டுப்பாட்டுக்காக சட்டம் கொண்டு வரப்போவதாக ஒபாமா அறிவித்து இருப்பது மக்கள் ஆட்சிக்கு எதிரான செயலாகும்.
மேலும் இது மக்கள் உரிமைகளை தடுக்கும் வகையில் உள்ளது. எனவே, இதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். குடியரசு கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒபாமா கொண்டு வரும் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்படும் என்று கூறி உள்ளார்.
துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி விற்பனை மிக அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.