அவர்களின் அரசாங்கம் என்பதால், எவரையும் கைது செய்ய முடியும் : மஹிந்த ராஜபக்சே !

வீட்டில் உள்ள சமையல் அறையில் இருக்கும் சட்டி, முட்டி, பானைகள் என சமையல் பாத்திரங்களை எண்ணிக்கொண்டிருப்பதால், தற்போது தான் ஊடகங்களில் தோன்றுவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தில் இயங்கும் சமையல் அறை மற்றும் கழிப்பறை உபகரணங்கள் பற்றி தன்னிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதால், இவ்வாறு தான் அவற்றை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டில் இருந்து சாப்பிட்டதையும், பருகியதை பற்றியும் கேட்கின்றனர். இன்னும் ஒரு வருடம் அவர்கள் இது குறித்து தேட வேண்டியேற்படும் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளமை சம்பந்தமாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, மகிந்த ராஜபக்ச,

அவர்களின் அரசாங்கம் என்பதால், எவரையும் கைது செய்ய முடியும் எனக் கூறியுள்ளார். எனினும் இவற்றால் தான் தளர்ந்து விட போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியில் அரசாங்கத்தை விமர்சிக்கும் நீங்கள் நாடாளுமன்றத்தில் ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,

president-mahinda-rajapaksa-newsfirst-626x380

அவசியமான நேரத்தில் கதைப்பேன் என்றார். எனினும் போராட்டத்தை முன்னெடுக்க புதியவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். நான் அவர்களுக்கு இடமளித்துள்ளேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து என்னை விரட்ட சிலர் திட்டமிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான கொள்கை பண்டாரநாயக்கவின் கொள்கை.

அனுர பண்டாரநாயக்க கூட கட்சியில் இருந்து வெளியேறிய போதும் நான் அந்த கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டேன். எனினும் கலப்படமாகி போனவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டு எமது கட்சியை எதிரியாக அடையாளப்படுத்துகின்றனர்.

நிலைமை இவ்விதமாக சென்றால், எதிர்க்கட்சியின் பணியை நிறைவேற்ற புதிய கட்சி ஒன்று உருவாகும். தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஒன்றில்லை. எதிர்க்கட்சித் தலைவர் கூட இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த உதவியவர்.

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியை வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கூட அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர உதவியதுடன் தேவையான நேரத்தில் அரசாங்கத்தை பாதுகாக்கும் நபர் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.