உலக நாடுகளுக்குத் தெரியாமல் வடகொரியா அணு ஆயுதச் சோதனை நடத்தி வருவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் கிளிஜூ பகுதியில் உள்ள அணு ஆயுதச் சோதனை நடத்தும் இடத்தில் 5.1 ரிக்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது இயற்கையான நிலநடுக்கம் அல்ல என்றும், அணு ஆயுதச் சோதனை நடத்தியதால் ஏற்பட்டது என்றும் சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், கிளிஜூ பகுதியில் உள்ள புங்ரீ என்ற இடத்தில் நடத்தப்பட்டது ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை தான் என்றும், இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் வடகொரிய அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் உறுதி செய்யப்பட்டது.
வடகொரியாவின் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனைக்கு தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ரஷ்யாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச விதியை அப்பட்டமாக மீறிய செயல் என்று ரஷ்யா விமர்சித்துள்ளது.
கொரிய தேச பகுதிகளில் ஏற்கனவே பதற்றம் சூழ்ந்து காணப்பட்டு வரும் நிலையில் தற்போது வடகொரியாவின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் மோசமடைய செய்யும்.