எந்தவித இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறாது : சஜித் !

எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதியின் ஓராண்டு பதவிக்கால பூர்த்தியினை முன்னிட்டு எந்தவித இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கட்டுவன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

sajith

2016 ஆம் ஆண்டில் நாட்டை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லக்கூடிய பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

”முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, சுற்றுலாவில் நாட்டை விட்டு சென்று தற்போது நாடு திரும்பிய வேளையில் தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் 8ஆம் திகதி ”அப்பப் புரட்சியை” ஏற்படுத்தப் போவதாகவும் அதனை முன்னிட்டு 7 நாட்களுக்கு களியாட்ட நிகழ்வுகளை நடாத்தவுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு மறுப்பு தெரிவிக்குமுகமாகவே அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் களியாட்ட நிகழ்வுகளை நடாத்த எங்கள் அரசாங்கம் முயலவில்லை அதற்கு மாறாக 8ஆம் திகதி முதல் இந்த வருடம் முழுவதும் 9 மாகாணங்கள் , 25 மாவட்டங்கள் ஊடாக 320 பிரதேச செயலாளர் பிரிவு, 14,022 கிராம சேவகர் பிரிவு, 38,000 சிறு கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

மேலும், விமல் வீரவன்ஸ உள்ளிட்ட கடந்த கால அரசாங்கம் கசினோ சூதாட்டம், எத்தனோல், கொலை கலாச்சாரம், சிறுவர் துஷ்பிரயோகம், போதைபொருள் வியாபாரம் போன்றவற்றால் மக்களை இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றமையை பொதுமக்கள் இன்னும் மறக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.