சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை – கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்ற வேண்டும் !

கல்முனை உட்பட நாட்டின் பல உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாய்ந்தமருதுவுக்கான தனியான உள்ளுராட்சி சபை ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை  கல்முனை மாநகர சபையில் நிறைவேற்ற வேண்டும். இதன் உந்துசக்திகளாக கல்முனையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரான வை.சி யஹியாகான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

yehiya kaan 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  கடந்த தேர்தல் காலத்தில் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த கருத்து ஒன்றினை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் வழங்கிய ஆணையை மீறி உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் நீடிக்கப்படாது என தெரிவித்திருந்தார். இருப்பினும் சில உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் சில காரணங்களால் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன. இதில் கல்முனை மாநகர சபையும் ஒன்றாகும்.

 

இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமையானது கல்முனை மாநகர சபைக்கு ஒரு வரப்பிரசாதமே. இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி சாய்ந்தமருதுவுக்கான உள்ளுராட்சி சபை ஒன்றின் தேவையைப் பிரேரணையாக நிறைவேற்ற வேண்டும். இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களின் பொறுப்புமிக்க பங்களிப்பு மிக அவசியமாகும். இவர்களே இந்த விடயத்தை ஒரு பிரேரணையாக கல்முனை மாநகர சபையில் முன்வைக்க வேண்டியவர்களாவர்.  

 

அம்பாறை மாவட்டத்தின் பிரதான வர்த்தக மையமாகவும் இலாபமீட்டும் தொழிற்றுறைகளைக் கொண்டதுமாக இன்று விளங்கும் சாய்ந்தமருது, தனியான பிரேச சபையாக பிரகடனம் செய்யப்படுவதற்கான சகல அம்சங்களையும் கொண்டதாகவே விளங்குகிறது.

 

சாய்ந்தமருதுவை தனியான பிரதேச சபையாக ஸ்தாபிப்பதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் சகல குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யக் கூடியதாக இருப்பதுடன் மக்களின் தேவைகள், மற்றும் அபிவிருத்திப் பணிகளையும் எந்த இடையூறுகளுமின்றி முன்னெடுக்க முடியும்.

 

இன்று மலையத்தில் செயற்படும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அனைத்துப் பேதங்களை மறந்து அந்தப் பிரதேசங்களில் புதிதாக உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதில் எட்டியுள்ள ஐக்கியம், ஒருமைப்பாடு நமக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

 

மேலும், அண்மைக் காலமாக நான் எனது மனட்சாட்சியின்படி, நியாயத்தின்பால் நின்று சில அறிக்கைகளை வெளியிட்டிருந்த போது முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நான் வெளியேறப் போவதாக சில அரசியல் சில்லறை வியாபாரிகள் மனப்பால் குடித்து மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அவ்வாறானதொரு நிலைமையோ தேவையோ எனக்கு இன்றைய சூழலில் ஏற்படவில்லை என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.