ரஜினிகாந்த் கூறியதால் ரோபோட் படத்தில் கிடைத்த வில்லன் வேடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை: அமிதாப் பச்சன்

 

Unknown

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகியுள்ள ‘வசிர்’ திரைப்படத்தின் அறிமுக விழா மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த விழாவின்போது அமிதாப் பச்சன் சிறப்பு பேட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, விழா அரங்கில் ஏராளமான ரசிகர்களும், நிருபர்களும் காத்திருந்தனர். 

இதில் பங்கேற்பதற்காக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட அமிதாப் பச்சன், மும்பை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் வெகுநேரம் சிக்கிக் கொண்டார். இதனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் விழாவுக்கு செல்ல முடியாது என்பதை தீர்மானித்த அவர், திடீரென காரை விட்டு கீழே இறங்கி விழா நடைபெற்ற அரங்குக்கு நடந்தே வந்தார்.

பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த அமிதாப் பச்சன், ’ரோபோட்’ படத்தில் வில்லனாக நடிப்பதற்காக அப்படத்தின் இயக்குனர் சங்கர் என்னை அணுகினார். இதுதொடர்பாக, நான் ரஜினிகாந்துடனுடன் தொடர்புகொண்டு பேசினேன். உங்களை ஒரு வில்லனாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார். அதனால், நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

தற்போது தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள ‘ரோபோட் 2’ படத்தில் நீங்கள் நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றதே? என்ற கேள்விக்கு பதிலளித்த அமிதாப் பச்சன், அந்தப் படத்தில் எனக்கு எந்த கதாபாத்திரமும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.